நண்பர்களுடன் வாக்குவாதம்... குளியலறையில் ரத்தம்: சுவிஸில் மாயமான வெளிநாட்டு மாணவி
பெல்ஜியம் நாட்டவரான மாணவி ஒருவர் நண்பர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மாயமான சம்பவம் பொலிசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சுவிட்சர்லாந்தின் Valais மண்டலத்தில் நண்பர்களுடன் விடுமுறை நாளை செலவிட்டு வந்த பெல்ஜியம் நாட்டவரான 21 வயது மாணவி Sarah Kassandra மாயமாகியுள்ளார்.
Zermatt அருகே ஒரு விடுதியில் தங்கியிருந்த சாரா மற்றும் நண்பர்கள் சம்பவத்தன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குறித்த விடுதியில் இருந்து வெளியேறிய சாரா, தமது உடைமைகள் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
அவரது போன், வாகனம் உள்ளிட்ட அனைத்தும் அவர் விட்டுச் சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு நண்பர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு வெளியேறியவர் இதுவரை விடுதிக்கு திரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
தகவல் தெரிவிக்கப்பட்டு, பொலிசார் முன்னெடுத்த சோதனையில், மாயமான மாணவியின் குளியலறையில் ரத்தம் காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சாராவின் நண்பர்களை அனைவரையும் பொலிசார் விசாரணை செய்துள்ளனர். தற்போது பெல்ஜியம் தூதரகமும் இந்த விவகாரம் தொடர்பில் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுவரையான விசாரணையில் வன்முறை சம்பவம் ஏதும் நடந்தததற்கான வாய்ப்புகள் இல்லை என்றே Valais மண்டல பொலிசார் தெரிவித்துள்ளனர்.