கடைசி ஆளாக வந்து ஒரே ஓவரில் குஜராத்தை சரித்த ரஸல்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆந்த்ரே ரஸல், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டியுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான டி20 லீக் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் அணி பேட்டிங்கை தெரிவு செய்து களமிறங்கியது.
தொடக்க வீரர் கில் 7 ரன்னில் வெளியேற, சஹாவுடன் கூட்டணி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்டினார். சஹா 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், பின்னர் வந்த மில்லரை 27 ஓட்டங்களில் சௌதி வெளியேற்றினார். அரைசதம் கடந்த ஹர்திக்கையும், ரஷித் கானையும் மிரட்டலான பந்து வீச்சால் சௌதி காலி செய்தார்.
குஜராத் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்கள் எடுத்திருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் 4 ஓவர்கள் வீசியதால், வருண் சக்கரவர்த்தி தான் கடைசி ஓவரை வீசுவாரோ என்று அனைவரும் நினைத்த நிலையில் திடீர் திருப்பமாக தனது முதல் ஓவராக கடைசி ஓவரை ஆந்த்ரே ரஸல் வீசினார்.
அவர் தனது துல்லியமான பந்து வீச்சால் குஜராத் அணியை நிலைகுலைய செய்தார். முதல் இரண்டு பந்துகளில் மனோகர், பெர்குசனை அவுட் செய்த ரஸல், கடைசி இரண்டு பந்துகளில் திவாட்டியா மற்றும் தயாள் ஆகியோரை ஆட்டமிழக்க செய்து, ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை அள்ளினார். இதனால் கடைசி ஓவரில் 5 ஓட்டங்கள் மட்டுமே குஜராத் அணிக்கு கிடைக்க, 157 ஓட்டங்களை வெற்றி இலக்காக அந்த அணி நிர்ணயித்துள்ளது.