பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் பரிதாபகரமான ராஜதந்திரம் இது! பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யா காட்டம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் நடவடிக்கையை பரிதாபகரமான ராஜதந்திரம் என்று ரஷ்யா கடுமையாக சாடியுள்ளது.
ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயார்
பிரான்ஸ் நாட்டுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் இந்த பேச்சுவார்த்தை வெறும் வார்த்தைகளாக மட்டும் இல்லாமல் அர்த்தமுள்ள செயல்முறையாக இருக்க வேண்டும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தொலைபேசியில் அழைத்து தீவிரமான விவகாரங்கள் குறித்து பேச நினைத்தால் ஜனாதிபதி விளாடிமிர் புடின் எப்போதும் தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

மக்ரோனின் பரிதாபகரமான ராஜதந்திரம்
RT ஊடகத்திற்கு சமீபத்தில் பேட்டியளித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார்.
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக மக்ரோன் அவ்வப்போது கூறி வந்தாலும், அது வெறும் கவனத்தை ஈர்க்கும் செயலாக மட்டுமே இருப்பதாக லாவ்ரோவ் குற்றச்சாட்டியுள்ளார்.
இதுவரை எந்தவொரு தொடர்பும் கொள்ளாமல், புடினுடன் பேசுவதற்கு ஒரு நாள் அழைப்பேன் என்று பொதுவெளியில் மக்ரோன் கூறி வருவது அவரது பரிதாபகரமான ராஜதந்திரம் என்றும் விமர்சித்துள்ளார்.
நீங்கள் உண்மையில் பேச விரும்பினால், நேரடியாக அழையுங்கள் என்றும் மக்ரோனுக்கு லாவ்ரோவ் அறிவுறுத்தியுள்ளார்.

மறைமுக பேச்சுவார்த்தை
ஒரு புறம் பேச்சுவார்த்தை தொடர்பாக இத்தகைய விவாதங்கள் எழுந்தாலும், மறைமுகமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் முதன்மை ஆலோசகரான இம்மானுவேல் போன் மாஸ்கோவிற்கு சென்று புடின் உயர் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த சந்திப்பை பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. அதே சமயம் மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |