பிரிட்டிஷ் ஏர்போர்ஸ் விமானத்தை இடைமறித்த ரஷ்ய விமானம்: தூதரகத்திற்கு பறந்த கண்டனம்
கருங்கடல் பகுதியில் பிரித்தானிய விமானத்தை ரஷ்யா இடைமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியா விமானத்தை இடைமறித்த ரஷ்ய விமானம்
கருங்கடல் பகுதியில் கடந்த மாதம் பிரிட்டிஷ் ராயல் ஏர்போர்ஸ்(RAF) உளவு விமானத்தை ரஷ்ய போர் விமானங்கள் அச்சுறுத்தும் வகையில் இடைமறித்ததற்கு பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
நேட்டோவின் கிழக்கு பகுதியை பாதுகாக்கும் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் ரிவெட் ஜாயிண்ட் உளவு விமானத்தை ரஷ்யாவின் இரண்டு போர் விமானங்கள் அத்துமீறி இடைமறித்து அச்சுறுத்தியதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யாவின் Su-35 ரக போர் விமானம் பிரித்தானிய விமானத்தின் மிக அருகில் வந்த காரணத்தினால் பிரிட்டிஷ் விமானத்தின் அவசரகால செயல்பாடுகள் தானாக செயல்பட தொடங்கியுள்ளது.
அத்துடன் Su-27 ரக ரஷ்ய போர் விமானம் பிரித்தானிய உளவு விமானத்தின் அருகில் அதாவது வெறும் 6 மீட்டர் இடைவெளியில் கடந்து சென்றதால் மிகப்பெரிய பாதிப்பை பிரிட்டிஷ் ஏர்போர்ஸ் தவிர்த்துள்ளது.
பிரித்தானியா உறுதி
இந்நிலையில் ரஷ்யாவின் இந்த செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி கடுமையாக கண்டித்துள்ளார்.
மேலும் இத்தகைய மோதல் நிறைந்த காலக்கட்டத்திலும், நேட்டோ மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்பில் எந்தவொரு சமரசமும் இல்லை என்று உறுதியாக ஜான் ஹீலி தெரிவித்துள்ளார்.
அத்துடன் அச்சுறுத்தலான காலக்கட்டத்தில் துணிச்சலுடனும், நிதானத்துடனும் செயல்பட்ட வீரர்களை ஜான் ஹீலி பாராட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட விமானியை கண்டிக்குமாறு ரஷ்ய தூதரகத்திற்கு பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் முறையிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |