பிரித்தானியாவில் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி அனுசரிக்கப்படும்: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிப்ரவரி 24ம் திகதி, அதே நேரம் பிரித்தானியாவில் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி அனுசரிக்கப்படும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
ஓராண்டு நிறைவடைகிறது
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்து, நாளை பிப்ரவரி 24ம் திகதி ஓராண்டு நிறைவடைகிறது. ரஷ்யாவின் இந்த கோர நடவடிக்கையால் இரு நாடுகள் மட்டுமின்றி, உணவு தானியங்களுக்காக இந்த இரு நாடுகளையும் நம்பியிருந்த ஏராளமான நாடுகளும் பாதிக்கப்பட்டன.
உணவு தானியங்கள் மட்டுமின்றி, ரஷ்யாவால் எரிவாயு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட நெருக்கடிகளையும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்கொண்டன. பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், மில்லியன் கணக்கானவர்கள் நாட்டைவிட்டும், நாட்டின் ஒருபகுதியை விட்டு இன்னொரு பகுதிக்கும் வெளியேறினர்.
உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா, அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகள் ஆயுத உதவிகளை முன்னெடுத்தது. இந்த இக்கட்டான சூழலில் இந்தியா போன்ற குறிப்பிட்ட நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து, போருக்கு உதவின.
உலக நாடுகளின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டு வந்த ரஷ்யாவுக்கு, இந்தியா போன்ற நாடுகள் பெட்ரோல் வாங்கியதால் பொருளாதார ரீதியாக பேருதவியாகவும் இருந்தது.
@REX
ஒரு நிமிட மெளன அஞ்சலி
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு நாடு முழுவதும் ஒரு நிமிட மெளன அஞ்சலி அனுசரிக்கப்படும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். நெருக்கடியான இந்த சூழலில் உக்ரைன் மக்களுடன் தாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக இந்த நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு நிமிட மெளன அஞ்சலி அனுசரிப்புக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்திலும் பிரதமர் சுனக் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Tomorrow will mark a year since Putin's brutal attack on Ukraine.
— Rishi Sunak (@RishiSunak) February 23, 2023
At 11am we will pause and stand together with our Ukrainian friends, as we have done at every stage, in their continuing fight for freedom. #StandWithUkraine pic.twitter.com/bU2xndwZtl
இதனிடையே, 2 வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்திருந்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் விமானங்கள் அளிப்பது தொடர்பில் மீண்டும் கோரிக்கை வைத்திருந்தார்.
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2.3 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு பிரித்தானியா அளித்திருந்தது.
இந்த ஆண்டும் அதே அளவுக்கான தொகையை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.