உக்ரைனுக்காக தீவிரம்... பிரித்தானியா உலகின் மிகப்பெரிய போர் வெறியர் என கொந்தளிக்கும் ரஷ்யா
உக்ரைனுக்காக சர்வதேச பாதுகாப்புப் படை ஒன்றை உருவாக்கும் பொருட்டு 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இன்று பாரிஸில் சந்திக்கவுள்ளனர்.
பிரித்தானியாவும் பிரான்சும்
பிரித்தானியா பாதுகாப்புப் படைத் தலைவர், பிரெஞ்சுப் படைத் தளபதியுடன் இணைந்து இந்த பாதுகாப்புத் தலைவர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்.
உக்ரைனில் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து அந்த நாட்டுக்கு தரைப்படைகளை அனுப்புவதற்கு அதிக நாடுகளின் ஒத்துழைப்பைப்பெற அட்மிரல் சர் டோனி ராடாகின் மற்றும் தியரி பர்கார்ட் ஆகியோர் முயற்சிகள் முன்னெடுப்பார்கள்.
பிரித்தானியாவும் பிரான்சும் மட்டுமே அத்தகைய உறுதிப்பாட்டைச் செய்த நாடுகளாக இருந்தன, ஆனால் நேற்று ஸ்பெயினும் அவர்களுடன் இணைந்தது. ஸ்பெயின் ஏற்கனவே கிழக்கு ஐரோப்பாவில் 3,000 வீரர்களைக் கொண்டுள்ளது.
பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் பாரிஸ் நகரில் பேச்சுவார்த்தை நடத்துவார்.
உக்ரைனுக்கான சர்வதேச பாதுகாப்புப் படை ஒன்றை உருவாக்குவதே இதன் இலக்காக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைன் தொடர்பில் வேகமெடுக்கும் இந்த நகர்வுகளால் கலக்கமடைந்துள்ள ரஷ்யா, உலகின் மிகப்பெரிய போர் வெறியர் இந்த பிரித்தானியா என குற்றஞ்சாட்டியுள்ளது.
சீர்குலைக்கும் நடவடிக்கை
மட்டுமின்றி, அமெரிக்கா தீவிரமாக முன்னெடுக்கும் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை பிரித்தானியா முன்னெடுப்பதாக ரஷ்யாவின் வெளிநாட்டு உளவுத்துறை சேவையைச் சேர்ந்த ஒரு அதிகாரி கொந்தளித்துள்ளார்.
அமெரிக்கா உக்ரைனுக்கு எதிராகத் திரும்பியுள்ள நிலையில், அந்நாட்டை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள கட்டாயப்படுத்தும் வகையில் இராணுவ உதவி மற்றும் உளவுத்துறை தகவல் பரிமாற்றம் என அனைத்தையும் ட்ரம்ப் நிர்வாகம் துண்டித்துள்ளது.
இதனையடுத்து பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஆகிய இருவரும் இணைந்து உக்ரைனுக்கான ஆதரவை திரட்டவும் எதிர்கால திட்டம் குறித்தும் தீவிரம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |