பழிவாங்கும் படலத்தைத் துவங்கிய ரஷ்யா... அச்சத்தில் ஜேர்மனி
பல்கேரியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு எரிவாயு வழங்கலை திடீரென நிறுத்தி தனது பழிவாங்கும் படலத்தை ரஷ்யா துவங்கியுள்ளது.
உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதைத் தொடர்ந்து பல நாடுகள் அதன் மீது தடைகள் விதித்தன. சில நாடுகள் தயங்கின. அதற்குக் காரணம், பல நாடுகள் இன்னமும் எரிவாயு மற்றும் எண்ணெய்க்காக ரஷ்யாவைத்தான் நம்பி உள்ளன.
ஆக, எதிர்பார்த்ததுபோலவே, தனது பழிவாங்கும் படலத்தைத் துவக்கியுள்ளது ரஷ்யா. ஆம், பல்கேரியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு எரிவாயு வழங்குவதை திடீரென நிறுத்தியுள்ளது ரஷ்யா.
ஆனால், அதற்கு சாக்குப்போக்காக, தாங்கள் எரிவாயுக்கான கட்டணத்தை ரூபிள்களில்தான் வழங்கவேண்டும் என விதித்த நிபந்தனைக்கு உடன்படாததாலேயே அந்நாடுகளுக்கு எரிவாயு வழங்குவதை நிறுத்தியுள்ளதாக புடினுடைய செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov தெரிவித்துள்ளார்.
தங்கள் மற்ற ஐரோப்பிய வாடிக்கையாளர்களும் ரூபிள்களில் கட்டணம் செலுத்தத் தவறினால், அவர்களுக்கு வழங்கப்படும் எரிவாயு விநியோகமும் நிறுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், இவ்வளவு நாட்களாக ரஷ்யாவை வெளிப்படையாக எதிர்க்கத் தயங்கிவந்த ஜேர்மனி இப்போதுதான் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க சம்மதித்துள்ளது.
எனவே, பல்கேரியா மற்றும் போலந்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக தங்களுக்கு எரிவாயு வழங்குவதையும் ரஷ்யா நிறுத்தலாம் என்ற அச்சம் ஜேர்மனிக்கும் உருவாகியுள்ளது.