ரஷ்யா பதிலளித்தே ஆகவேண்டும்: பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தல்
ரஷ்யா தன் குற்றச்செயல்களுக்கு பதிலளித்தே ஆகவேண்டும் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
உக்ரைன் நகரமான Buchaவில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுடைய புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில், ரஷ்ய தரப்பின் நடவடிக்கைகளை கண்டித்த மேக்ரான், ரஷ்ய அதிகாரிகள் தங்கள் குற்றச்செயல்களுக்கு பதிலளித்தே ஆகவேண்டும் என்று கூறினார்.
உக்ரைன் தெருக்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோழைத்தனமாக கொன்று குவிக்கப்பட்டுள்ளார்கள் என்று ட்விட்டரில் வெளியிட்ட செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார் அவர்.
சனிக்கிழமையன்று Bucha நகரின் தெருக்களில் வரிசையாக கிடந்த பொதுமக்களின் உடல்களைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
Bucha நகரில் வாழ்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நகர மேயரான Anatoliy Fedoruk தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், போலந்து நாட்டின் துணைப்பிரதமர், ரஷ்யாவுடன் பிரான்ஸ் அதிக
நெருக்கம் காட்டி வருவதாக விமர்சித்ததைத் தொடர்ந்து மேக்ரானின் கண்டனச் செய்தி
வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.