ரஷ்யாவில் இருந்து எரிவாயு கிடைப்பதில் சிக்கல்., முன்னெச்சரிக்கையாக திட்டமிட்ட ஜேர்மனி!
ரஷ்யா தனது இயற்கை எரிவாயு விநியோகத்தை துண்டித்தால், ஜேர்மனி மீண்டும் நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களை தொடங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேர்மனி அதன் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தையும் 2030-க்குள் மூட திட்டமிட்டிருந்தது. ஆனால், ஜேர்மன் பொருளாதார அமைச்சகம் இந்த வாரம் வரையப்பட்ட மசோதாவில் மின் உற்பத்தி நிலையங்களை இருப்பில் வைக்க உத்தரவிடுவதாக கூறியதாக செய்திகள் வெளியாகின.
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜேர்மனி, ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவை பெரிதும் நம்பியுள்ளது.
இறக்குமதிக்கு ரூபிள்களில் பணம் செலுத்தத் தவறியதால் போலந்து மற்றும் பல்கேரியாவுக்கான இயற்கை எரிவாயு விநியோகங்களை ரஷ்யா ஏப்ரல் மாத இறுதியில் நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் பொருட்களை நம்பியிருப்பதைக் குறைக்க துடிக்கின்றன.
இந்நிலையில், ஜேர்மனியின் முன்மொழியப்பட்ட விதிமுறைகள் நிலக்கரி மற்றும் லிக்னைட் எரியும் ஆலைகளை உள்ளடக்கும் மற்றும் மார்ச் 2024 இறுதி வரை பொருந்தும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த மசோதாவுக்கு அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் அமைச்சரவையின் ஒப்புதல் இன்னும் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
மொத்தம் 2.1 ஜிகாவாட் திறன் கொண்ட நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் அக்டோபரில் மூடப்படும் என்றும், 0.5 ஜிகாவாட் திறன் கொண்ட ஆலைகள் 2023-ஆம் ஆண்டு நிறுத்தப்படும் என்றும் Zeit Online தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த 4.3 ஜிகாவாட் திறன் கொண்ட நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் 1.6 ஜிகாவாட் திறன் கொண்ட எண்ணெய் எரியும் ஆலைகள் ஏற்கனவே இருப்பில் உள்ளன என்று ஒன்லைன் தளம் தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களை படிப்படியாக அகற்றும் திட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக அமைச்சகம் கூறியது, ஆனால் மின்சார பற்றாக்குறை அச்சுறுத்தல் இருந்தால் அவை மீண்டும் செயல்படுத்தப்படும் என்று Zeit Online தெரிவித்துள்ளது.
பொருளாதார மந்திரி ராபர்ட் ஹேபெக், 2024-ஆம் ஆண்டளவில் ஜேர்மனி ரஷ்ய எரிவாயுவில் இருந்து பெருமளவு சுதந்திரமாகிவிடக்கூடும் என்றும், ரஷ்ய நிலக்கரி மற்றும் எண்ணெயை இன்னும் விரைவாக நீக்கிவிடலாம் என்றும் கூறினார்.