1945க்கு பிறகு ஐரோப்பா மிகப்பெரிய போரை சந்திக்கவுள்ளது: ரஷ்யாவிற்கு போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை!
1945ம் ஆண்டுக்கு பிறகு ஐரோப்பிய பிராந்தியத்தில் மிகப்பெரிய போரை உருவாக்க ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மற்றும் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ இருவரும் இணைந்து அணுஆயுத சோதனைகளை பார்வையிட்டதை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் இடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்ற உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் கோரிக்கைகளை நேரடியாக அறிந்து கொள்வதற்கும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் உக்ரைன் விரும்புவதாக வெளிப்படையாக தெரிவித்தார்.
இதற்கு ரஷ்யா அதிகாரப்பூர்வமாக இன்னும் பதில் எதுவும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் BBC தொலைக்காட்சிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அளித்துள்ள பேட்டியில், ரஷ்யா, 1945 ஆம் ஆண்டிற்கு பிறகு ஐரோப்பிய பிராந்தியத்தில் மிகப்பெரிய போரை நிகழ்த்த திட்டமிட்டு இருப்பதாக நான் அஞ்சுகிறேன் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுதல் அது "இந்த தலைமுறையின் மிகப்பெரிய அழிவின் ரத்தக்கறையை ஏற்படுத்தும்", எனவும் பல பெற்றோர்கள் தங்கள் இளம் மகன்களை போரில் இழந்து துன்பப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்த இருநாடுகளுக்கு இடையே ஆன போரானது, நிச்சயமாக இருபக்கமும் மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தும்.
மேலும் உக்ரைனியர்கள் தங்கள் சுதந்திரத்திற்காக கடைசிவரை போராடுவார்கள் என்றும், அதற்கு மேற்கத்திய நாட்டு தலைவர்கள் ஒன்றாக வலுவாக, உக்ரைனுக்கு துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.