ரஷ்யாவின் அடுத்தகட்ட திட்டத்தை வெளியிட்ட பிரித்தானிய பாதுகாப்பு துறை: உஷாரான உக்ரைன் அரசு
உக்ரைனில் அதிகாரப்பூர்வமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் பகிர்வை சீர்குலைக்கும் விதமாக அந்த நாட்டின் தகவல்தொடர்பு கட்டமைப்புகளை ரஷ்ய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக பிரித்தானிய பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் 12வது நாளை எட்டியுள்ள போதிலும், ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் எந்தவொரு மாறுபாடும் இன்றி மேலும் மேலும் அதிகரித்து கொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்க்விவ் மற்றும் மரியுபோல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் குடியிருப்பு பகுதிகள் என அனைத்தின் மீதும் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தனது ஏவுகணை தாக்குதலை நடத்திவருகிறது.
இந்தநிலையில், ரஷ்யாவின் இந்த தாக்குதல்களை சமாளிப்பதற்கு ராணுவ உதவிகளை உக்ரைனின் நட்பு நாடுகள் தர மறுத்துவிட்டன, ஆனால் ரஷ்யா மீதான நேரடி பொருளாதார தடை மற்றும் மறைமுகமான உளவுத்துறை தகவல் பகிர்வு போன்ற ஆதரவுகளை தொடர்ந்து அளித்துவருகின்றனர்.
அந்தவகையில், உக்ரைன் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான தகவல் தொடர்பு மற்றும் போர் குறித்த உக்ரைன் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை தடுத்து நிறுத்தி அவற்றை சீர்குலைக்கும் விதமாக அந்த நாட்டின் தகவல்தொடர்பு கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டு இருப்பதாக பிரித்தானிய பாதுகாப்புத்துறை திங்கள்கிழமை எச்சரித்துள்ளது.
மேலும் இந்த எச்சரிக்கையானது கடந்த 02 திகதி உக்ரைனின் கெய்வில் நகரில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தை குறிவைத்து குண்டுவெடிப்பு நடத்திய ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலுக்கு பிறகு வந்துள்ளது.