போரின்போதே 19 பில்லியன் டொலர்களுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி: பெருமளவு வருவாய் ஈட்டிய நாடு
ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி வருவாய் மார்ச் மாதத்தில் பெருமளவு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி
மத்திய கிழக்கில் போர் காரணமாக கச்சா எண்ணெய், பெட்ரோலிய விநியோகம் தடைப்பட்டுள்ளது.
அதே சமயம் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக்கொள்ள இந்தியா உட்பட சில நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது.
மார்ச் 12 மற்றும் ஏப்ரல் 11 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் அமெரிக்க கருவூலத் துறை 30 நாட்களுக்கான தற்காலிக விலக்கை அளித்தது.
உலகளாவிய எரிசக்தி சந்தைகளை நிலைப்படுத்த, அமெரிக்கா இதனை அனுமதித்ததாக கூறப்பட்டது.
பெருமளவு அதிகரித்த வருவாய்
இதன்மூலம் மார்ச் மாதத்தில் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி வருவாய் பெருமளவு அதிகரித்ததாகவும், முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அது ஏறக்குறைய இரு மடங்காக உயர்ந்ததாகவும் சர்வதேச எரிசக்தி முகமை (IEA) தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிக்கையில், ரஷ்யா கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி மூலம் ஈட்டிய வருவாய், கடந்த மாதம் 19 பில்லியன் டொலராக உயர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பிந்தைய மிகக் குறைந்த அளவாக 9.75 பில்லியன் டொலரை விட, மார்ச் மாதத்தில் இரு மடங்காக வருவாய் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
7.1 மில்லியன் பீப்பாய்கள்
கடந்த மாதம் ரஷ்யாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதி ஒரு நாளைக்கு 7.1 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்தது; இது பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு நாளைக்கு 320,000 பீப்பாய்கள் அதிகரிப்பாகும்.
கச்சா எண்ணெய் உற்பத்தியிலும் மிதமான உயர்வு காணப்பட்டது; இது ஒரு நாளைக்கு 8.96 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்தது.
இதற்கிடையில், உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் துறைமுகம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு தொடர்ந்து சீர்குலைந்து வருவதனால், ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி குறுகிய காலத்தில் ஒரு தேக்கநிலையை அடையக்கூடும் என்றும் சர்வதேச எரிசக்தி முகமை எச்சரித்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |