ஒலிம்பிக் தொடர்பில் பிரான்ஸ் மீது ரஷ்யா திடீர் குற்றச்சாட்டு
உக்ரைன் போரைத் தொடர்ந்து, பிரான்ஸ் ரஷ்யா இடையிலான உறவு முற்றிலும் சீர் குலைந்துள்ள நிலையில், பிரான்ஸ் மீது வேடிக்கையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது ரஷ்யா.
சீர் குலைந்த ரஷ்யா பிரான்ஸ் உறவு
ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களைப்போல செயல்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் ரஷ்ய ஜனாதிபதி புடினும், இன்று எதிரிகள் போல மாறிவிட்டார்கள்.
உக்ரைன் போர் துவங்கியபோது, புடின் தனது நண்பர், தான் சொன்னால் கேட்பார் என்று நம்பி, அவருடன் உக்ரைன் ஊடுருவலை நிறுத்துவது தொடர்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார் மேக்ரான்.
ஆனால், அவரது நட்பையோ கோரிக்கையையோ சட்டை செய்யவேயில்லை புடின். அதனால், உலக ஊடகங்கள் பல மேக்ரானை கேலி செய்யும் வகையில் செய்திகள் வெளியிட்டன.
அதைத் தொடர்ந்து மேக்ரானில் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. உக்ரைனுக்கு ஆதரவாக அறிக்கைகள் விடத் துவங்கினார் அவர். குறிப்பாக உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் ராணுவத்தை அனுப்பவேண்டும் என்னும் ரீதியில் அவர் கருத்துக்கள் தெரிவிக்க, ரஷ்யா தரப்பு எரிச்சலடைந்தது. ஆக, இருதரப்பு உறவு முற்றிலும் சீர் குலைந்தது.
பிரான்ஸ் மீது ரஷ்யா குற்றச்சாட்டு
இப்படி இருதரப்பு உறவுகள் சீர் குலைந்துள்ள நிலையில், திடீரென வேடிக்கைக்குரிய வகையில் பிரான்ஸ் மீது குற்றச்சாட்டு ஒன்றைக் கூறியுள்ளது ரஷ்யா.
பிரான்சுக்கான ரஷ்ய தூதரான Aleksey Meshkov, பிரான்ஸ், ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில், தங்களைக் கலந்தாலோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன், நாங்கள் ரஷ்ய நகரமான Sochiயில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும்போது, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விடயங்களை பிரான்சுடன் நாங்கள் பகிர்ந்துகொண்டோம்.
ஆனால், பிரான்சில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு தொடர்பில் பாரீஸிலுள்ள பல நாடுகளின் தூதரங்களுடனும் இணைந்து செயலாற்றும் அமைப்பொன்றை அமைத்துள்ளது பிரான்ஸ். ஆனால், பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்க ரஷ்ய தூதரகத்தை மட்டும் பிரான்ஸ் அழைக்கவில்லை, எங்களிடம் அது குறித்து தெரிவிக்கவும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் பிரான்சுக்கான ரஷ்ய தூதரான Aleksey Meshkov.
சமீபத்தில் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்தப்பட்ட விடயத்தில், பிரான்ஸ் மீதும் அதன் மேற்கத்திய கூட்டாளர்கள் மீதும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ள நிலையில், பிரான்சில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு தொடர்பில் தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என ரஷ்யா கூறுவது வேடிக்கையாகத்தான் உள்ளது.