பிரான்ஸ் தூதருக்கு ரஷ்யா சம்மன்: இருநாடுகளுக்கிடையில் முற்றும் மோதல்
பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் ரஷ்யா தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள இயலாதவை என்று கூறி, பிரான்ஸ் தூதருக்கு ரஷ்யா சம்மன் அனுப்பியுள்ளது.
முற்றும் மோதல்
பிரான்சுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான மோதல் அதிகரித்துவருகிறது. ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களைப்போல செயல்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் ரஷ்ய ஜனாதிபதி புடினும், இன்று எதிரிகள் போல மாறிவிட்டார்கள்.
இரு நாடுகளும் மாறி மாறி வார்த்தைப்போரில் ஈடுபட்டுவருகின்றன. சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரான Sergei Shoigu, பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான Sébastien Lecornuவை தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.
அப்போது அவர், மாஸ்கோ மீதான தாக்குதலின் பின்னணியில் உக்ரைனும் பிரான்சும் உள்ளனவா என்னும் தோரணையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த மேக்ரான், ரஷ்யாவின் கருத்துக்கள் அபத்தமானவை என்றும், மாஸ்கோ மீதான தாக்குதலின் பின்னணியில் பிரான்ஸ் இருப்பதாகக் கூறுவது அர்த்தமற்றது என்றும், அது உண்மையுடன் எவ்வகையிலும் ஒத்துப்போகவில்லை என்றும், இது தகவல்களை மிகைப்படுத்துதல் என்றும், ரஷ்யாவின் இன்றைய போர் உபாயங்களில் இதுவும் ஒன்று என்றும் கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள்
இரு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையால் பிரான்சுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு மேம்படுவதற்கு பதிலாக, நிலைமை மேலும் மோசமானது. அதைத் தொடர்ந்து, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான Stephane Sejourne, ரஷ்யாவுடன் பேச பிரான்சுக்கு ஆர்வம் இல்லை என்று கூறியிருந்தார்.
ஆனால், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான Stephane Sejourne தெரிவித்த இந்த கருத்து ரஷ்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
ஆகவே, ரஷ்யா, பிரான்ஸ் தூதரான Pierre Levyக்கு சம்மன் அனுப்பியது. அதைத் தொடர்ந்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பிரான்ஸ் அமைச்சரின் கருத்துக்களின் ஏற்றுக்கொள்ள இயலாத தன்மை குறித்து பிரான்ஸ் தூதருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும், அவை எந்த விதத்திலும் நிஜத்துடன் ஒத்துப்போகாதவை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விடயம், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தும் சாத்தியக்கூற்றை பாதிக்கும் நோக்கில் வேண்டுமென்றே நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |