ரஷ்யாவை கடுமையாக எச்சரித்த பிரித்தானியாவும் ஜேர்மனியும்: விரிவான பின்னணி
ரஷ்ய மற்றும் சீன செயற்கைக்கோள்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்து ஜேர்மனியும் பிரித்தானியாவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புறக்கணிக்க முடியாது
குறித்த இரு நாடுகளும் மேற்கத்திய நாடுகளால் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்களை உளவு பார்ப்பது தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது.

சமீபத்திய வாரங்களில், தங்கள் செயற்கைக்கோள்களை ரஷ்யா கண்காணிப்பது, தொடர்புகளை ஸ்தம்பிக்க செய்வது மற்றும் குறுக்கிடுவது போன்ற தொடர் நிகழ்வுகளை பிரித்தானியாவும் ஜேர்மனியும் எடுத்துரைத்துள்ளன.
ரஷ்யாவின் நடவடிக்கைகள், குறிப்பாக விண்வெளியில், நம் அனைவருக்கும் ஒரு அடிப்படை அச்சுறுத்தலாக உள்ளன. இந்த அச்சுறுத்தலை நாம் இனி புறக்கணிக்க முடியாது என்று ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.
தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை குறிவைப்பது செயற்கைக்கோள் படங்கள், தொலைத்தொடர்புகள் மற்றும் பிராட்பேண்ட் செயற்கைக்கோள் இணைய அணுகல் போன்றவற்றைப் பாதிக்கலாம்.
மட்டுமின்றி, இராணுவ நடவடிக்கைகளையும் சிவில் விமானப் போக்குவரத்தையும் சிக்கலுக்கு உள்ளாக்கும். இந்த நிலையில், சீனாவுடனான ஒத்துழைப்பை ரஷ்யா அதிகரித்துள்ளது என்றும், அதன் சார்பாக சீனா உக்ரேனிய பிரதேசத்தில் செயற்கைக்கோள் உளவு நடவடிக்கைகளை நடத்தி வருவதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே பிரித்தானியாவும் ஜேர்மனியும் ரஷ்யாவிற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவும் சீனாவும் சமீபத்திய ஆண்டுகளில் தங்கள் செயற்கைக்கோள் வலிமையை தீவிரமாக விரிவுபடுத்தியுள்ளன.
ரஷ்யாவிற்கு இல்லை
இதனால், அவர்களால் எந்த நாட்டின் மீதும் உளவு நடவடிக்கைகள் மற்றும் சதிச் செயல்களில் ஈடுபட முடியும் என்றே போரிஸ் பிஸ்டோரியஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செயற்கைக்கோள்களை முடக்கவும் அழிக்கவும் விண்வெளியில் அணு ஆயுதங்களை உருவாக்கும் ரஷ்யாவின் திட்டங்கள் குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட் இந்த ஆண்டு மீண்டும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் எண்ணம் ரஷ்யாவிற்கு இல்லை என்று விளாடிமிர் புடின் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
ஆனால் 2024 ஆம் ஆண்டில் விண்வெளி அடிப்படையிலான அணு ஆயுதங்களை உருவாக்க வேண்டாம் என்று உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தையும் ரஷ்யா வீட்டோ செய்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |