பழிக்குப் பழி வாங்குவோம்... பிரான்சுக்கு ரஷ்யா எச்சரிக்கை
பிரான்ஸ், ரஷ்ய தூதரக அதிகாரிகள் ஆறு பேரை நாட்டை விட்டு வெளியேற்றியதைத் தொடர்ந்து, பிரான்சை பழிக்குப் பழி வாங்க இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
பாரீஸிலுள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பிரான்ஸ் அதிகாரிகள் எடுத்துள்ள விரோத நடவடிக்கையைத் தொடர்ந்து, தக்க நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் 48 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், ஆறு ரஷ்ய ஏஜண்டுகளின் நடவடிக்கைகள் பிரான்சின் தேச நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி அவர்களுடைய தூதரக மட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
பிரான்ஸ் மண்ணில் ரஷ்ய உளவுத்துறை மேற்கொண்ட நடவடிக்கை ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் மாலை, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தூதர் என்ற பெயருடன் அந்த ஆறு ரஷ்ய ஏஜண்டுகளும் மேற்கொண்ட நடவடிக்கை நமது தேச நலனுக்கு முரணானது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப் பதிவு நடந்ததைத் தொடர்ந்து, அந்த ரஷ்ய ஏஜண்டுகள் மேற்கொண்ட நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.