"இன்னொரு முறை வந்தால், குண்டு போட்டு தாக்குவோம்" பிரித்தானியாவுக்கு ரஷ்யா மிரட்டல்
கருங்கடல் பகுதியில் பிரித்தானிய கப்பல்கள் தொடர்ந்து பதற்றம் ஏற்படுத்த முனைந்தால், அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்வேறு நாடுகளின் எல்லையாக இருக்கும் கருங்கடலை, ரஷ்யா தனது அதிகார மையமாக பார்த்து வருகிறது. துருக்கி, பல்கெரியா, உக்ரைன் என்று பல நாடுகளின் எல்லையில் கருங்கடல் உள்ளது.
ரஷ்யா இதன் இன்னொரு எல்லையில் உள்ளது. இந்த கருங்கடலில் யாருக்கும் ஆதிக்கம் அதிகம் என்பதில் ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, துருக்கி, பிரான்ஸ் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் கடல் எல்லையில் கடற்படை தளங்களையும் அமைத்து உள்ளது.
பிரித்தானியாவின் Royal Navy destroyer Defender என்ற போர் கப்பல் இங்கே ரோந்து பணியை மேற்கொண்டு வந்தது. அப்போது கருங்கடலில் ரஷ்யாவின் கடல் பகுதிக்குள் பிரித்தானியாவின் போர்க் கப்பல் வந்ததாக ரஷ்யா தெரிவிக்கிறது.
இந்த நிலையில், இன்னொரு முறை கடற்படை கப்பல் வந்தால் பிரித்தானிய கடற்படை தளங்களை குண்டு போட்டு தாக்குவோம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு ரஷ்யாவிற்கான பிரித்தானிய தூதரை அழைத்து ரஷ்யா கடும் எச்சரிக்கையும் விடுத்து இருக்கிறது.
ஆனால், பிரித்தானியா இதை மறுத்துள்ளது. எங்களை நோக்கி வார்னிங் ஷாட் எதுவும் போடப்படவில்லை. அதோடு, நாங்கள் ரஷ்ய எல்லைக்குள் செல்லவில்லை. நாங்கள் ரோந்து சென்றது சர்வதேச நாடுகள் ஒப்புக்கொண்ட உக்ரைனின் எல்லையில்தான். ரஷ்ய எல்லையை நாங்கள் கடக்கவில்லை. ரஷ்யா தவறான தகவல்களை தருகிறது என்று பிரித்தானியா கூறி வருகிறது.