ரஷ்யாவின் சொத்து ஒன்றை உக்ரைனுக்கு பரிசளிக்கும் கனடா
ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ரஷ்யாவின் மிகப்பெரிய சரக்கு விமானம் ஒன்றை உக்ரைனுக்கு பரிசளிக்க கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடுத்து வைக்கப்பட்ட சரக்கு விமானம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து கனடாவின் வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க ட்ரூடோ நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரான ரஷ்யாவின் மிகப்பெரிய சரக்கு விமானம் ஒன்று தடுத்து வைக்கப்பட்டது.
@getty
2022 பிப்ரவரி மாதம் முதல் குறித்த விமானமானது ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Volga-Dnepr விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான Antonov An-124 என்ற அந்த சரக்கு விமானமானது தற்போது உக்ரைன் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ரொறன்ரோ விஜயம் செய்த உக்ரேனிய பிரதமர் Denys Shmyhal கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்து பாதிக்கப்பட்ட தேசத்திற்கு உதவிகளை பெற்றுக்கொண்டுள்ளார், அதில் இந்த சரக்கு விமானமும் உட்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
REX/Shutterstock
குறித்த தகவலை உக்ரைன் பிரதமரும் தமது பேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். ஆனால் எப்போது அந்த விமானம் கைமாறப்படும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
Antonov An-124 என்ற அந்த சரக்கு விமானமானது 1982ல் இருந்தே செயல்பட்டு வருகிறது.
உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான இது, 330,000 பவுண்டுகளுக்கு மேல் கொண்டு செல்லும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.