ரஷ்ய எரிவாயு நிறுத்தப்பட்டதால் பல மில்லியன் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்: ஜேர்மன் மாகாணம் ஒன்றிலிருந்து ஒலிக்கும் குரல்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டால் பல மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக ஜேர்மனியின் பவேரிய மாகாண பிரீமியர் தெரிவித்துள்ளார்.
பவேரிய பிரீமியரான Markus Söder கூறும்போது, நாட்டின் நிர்வாக அமைப்பு, ரஷ்ய எரிவாயு திடீரென நிறுத்தப்படும் நிலைக்கு போதுமான அளவில் தயாராக இருக்கவில்லை என்றும், குளிர்காலத்தில் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆற்றலுக்கு அவசர நிலை உருவாகும் ஒரு அபாயம் உள்ளதாக தெரிவிக்கும் அவர், அதன் விளைவாக பல மில்லியன் பணியாளர்கள் பாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸின் அரசை கடுமையாக விமர்சித்துள்ள அவர், அரசு ஆற்றலுக்கு மாற்று ஏற்பாடு செய்வதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்வதாகவும், ரஷ்யா ஜேர்மனிக்கு வழங்கும் எரிவாயுவை மெதுவாகவும் படிப்படியாகவும் மொத்தமாக நிறுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
எரிவாயு தட்டுப்பாட்டால், மக்கள் குளிர்காலத்தில் கடுமையான குளிரால் அவதியுறும் அபாயம் உள்ளது என்று கூறும் Söder, அணு மின் நிலையங்கள் தொடர்ந்து செயல்படவேண்டும் என்றும், புதிதாக எரிவாயு வளங்களைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
PC: Mikhail Metzel, Sputnik, Kremlin Pool Photo via AP