பிரித்தானிய கடற்பகுதியில் பல ஆயிரம் டன் வெடிபொருட்களுடன் ரஷ்ய கப்பல்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி
மிக ஆபத்தான 20,000 டன் வெடிப்பொருட்களுடன் ரஷ்ய சரக்கு கப்பல் ஒன்று பிரித்தானிய கடற்பகுதியில் காணப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
டோவர் ஜலசந்தியில்
நோர்வே நாடு அனுமதி மறுத்த நிலையிலேயே ரஷ்ய கப்பல், பிரித்தானியாவை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. Ruby என்ற அந்த ரஷ்ய கப்பல் தற்போது கென்ட் கடற்கரையில் தேம்ஸ் முகத்துவாரத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் உள்ளது.
மேலும், அந்த கப்பலானது டோவர் ஜலசந்தியில் நுழைவதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறது என்றே கூறுகின்றனர். முன்னர் ஒருமுறை தரைதட்டிய நிலையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தற்போது பழுபார்ப்பதற்காக துறைமுக அனுமதியை ரூபி கப்பல் நிர்வாகம் நாடியுள்ளது.
ஆனால் ரஷ்ய கப்பலில் அம்மோனியம் நைட்ரேட் நிரப்பியிருப்பதால் அதிகாரிகள் எச்சரிக்கையாக உள்ளனர். மட்டுமின்றி, கடந்த 2020ல் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் ஒரு பகுதியை மொத்தமாக சேதப்படுத்திய அம்மோனியம் நைட்ரேட் அளவை விட 7 மடங்கு தற்போது இந்த ரஷ்ய கப்பலில் கொண்டுசெல்லப்படுகிறது.
2020ல் பெய்ரூட் துறைமுகத்தில் சேமிக்கப்பட்டிருந்த வெறும் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் ரசாயனம் எதிர்பாராமல் வெடித்ததில் 218 பேர்கள் கொல்லப்பட்டதுடன், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,000 கடந்தது.
கடற்பகுதியில் அனுமதிக்கப்படாது
தற்போது ரூபி கப்பலானது 20,000 டன் அம்மோனியம் நைட்ரேட் ரசாயனத்துடன் பிரித்தானியா துறைமுகத்தை நாடியுள்ளது. ஏற்கனவே சேதமடைந்துள்ள ரூபி கப்பலானது செப்டம்பர் 3ம் திகதி புயலில் இருந்து தப்ப நோர்வே துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கோரியுள்ளது.
ஆனால் சில நாட்களுக்குப் பிறகு உள்ளூர் மக்களிடையே அச்சம் அதிகரித்ததால் அதிகாரிகள் கப்பலை துறைமுகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தினர்.
ரூபி கப்பலானது தற்போது மால்டாவுக்கு பயணப்படும் நிலையில் உள்ளது என்றே கூறப்படுகிறது. ஆனால் இன்னொரு சிக்கலாக, அதன் சரக்குகளை காலி செய்யாமல், மால்டா கடற்பகுதியில் அனுமதிக்கப்படாது என்று மால்டாவின் போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |