கலக்கமூட்டும் செயல்... ரஷ்யா தொடர்பில் சீனாவின் நடவடிக்கையில் ஜேர்மனி அதிருப்தி
சீனாவில் ரஷ்ய வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக வெளியான ஊடகச் செய்திகள் தொடர்பாக, பெர்லினில் உள்ள சீனத் தூதர் அவசரச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கவலையளிக்கக்கூடிய
குறித்த தகவலை ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்குச் சீன அரசுத் தரப்பினரிடமிருந்து, குறிப்பாகச் சீன மக்கள் விடுதலை இராணுவத்திடமிருந்து, ஆதரவு கிடைப்பதை மிகவும் கவலையளிக்கக்கூடிய விடயமாக வெளிவிவகார அமைச்சரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மட்டுமின்றி, உக்ரைனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்ந்து நடத்த ரஷ்யாவை அனுமதிக்கும் எந்தவொரு விடயமும் ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்றும் வெளிவிவகார அமைச்சரகம் குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பிய உளவுத்துறையின் ரகசிய ஆவணங்களை மேற்கோள்காட்டி, சீன ராணுவம் தனது சொந்த மண்ணில் நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்களுக்கு ரகசியமாகப் பயிற்சி அளித்ததாகவும், அவர்களில் சிலர் உக்ரைனில் களமிறக்கப்பட்டதாகவும் ஜேர்மன் நாளிதழான 'டை வெல்ட்' (Die Welt) மே 20 அன்று செய்தி வெளியிட்டது.
அச்சுறுத்தல்
இந்த நிலையிலேயே, ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சகம் சீனத் தூதரை வரவழைத்து, ரஷ்யா தனது ஆக்கிரமிப்புப் போரைத் தொடர உதவும் எந்தவொரு நடவடிக்கையும் ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தல் என்று கூற உள்ளது.
இதனிடையே, கிழக்கு உக்ரைனில் உள்ள கோஸ்டியான்டினிவ்கா (Kostiantynivka) பகுதியைத் தங்கள் படைகள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.

போருக்கு முன்பு சுமார் 78,000 மக்கள் வசித்த இந்த நகரத்தைக் கைப்பற்றுவதற்கான போர் 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து நடைபெற்று வருகிறது; 1,000 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளம் கொண்ட போர்க்களத்தில் ரஷ்யாவின் தற்போதைய முக்கிய நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |