கடும் சிக்கலில் லிஸ் ட்ரஸ்... அதிமுக்கிய அலைபேசி தகவல்கள் ரஷ்யா வசம்: கசிந்தது எப்படி?
உக்ரைன் தொடர்பான வெளிவிவகார அதிகாரிகளுடன் லிஸ் ட்ரஸ் விவாதித்த தரவுகள் அனைத்தும் ரஷ்யா வசம்
ஓராண்டு வரையில் லிஸ் ட்ரஸ் பரிமாறிய குறுந்தகவல்கள் அனைந்தும் ரஷ்ய உளவாளிகளால் தரவிறக்கம்
பிரித்தானிய முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் பயன்படுத்திவந்த அவரது தனிப்பட்ட அலைபேசியை ரஷ்ய உளவாளிகள் ஊடுருவியதாகவும், அதிமுக்கிய தகவல்கள் கசிந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
லிஸ் ட்ரஸ் அலைபேசியை ஊடுருவிய உளவாளிகள் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்காக பணியாற்றும் சிறப்பு குழு எனவும் கூறப்படுகிறது. லிஸ் ட்ரஸ் வெளிவிவகார அமைச்சராக பொறுப்பு வகித்திருந்த நாட்களில், கட்சியின் தலைவர் போட்டிக்கான பரப்புரை முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்தில் அவரது தனிப்பட்ட அலைபேசி ஊடுருவப்பட்டுள்ளது.
@EPA
மேலும், உக்ரைன் தொடர்பான வெளிவிவகார அதிகாரிகளுடன் லிஸ் ட்ரஸ் விவாதித்த தரவுகள், அவர்களுடன் பகிர்ந்துகொண்ட குறுந்தகவல்கள் என அனைத்தும் ரஷ்யா வசம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, பிரித்தானியா சார்பாக உக்ரைனுக்கு அனுப்பிய மற்றும் அனுப்ப திட்டமிட்டுள்ள நவீன ஆயுதங்கள் தொடர்பிலும் லிஸ் ட்ரஸ் விவாதித்திருந்துள்ளார். அத்துடன், முன்னாள் நிதியமைச்சர் Kwasi Kwarteng உடனான லிஸ் ட்ரஸ்ஸின் தகவல் பரிமாற்றங்களும் ரஷ்யா வசம் சிக்கியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், ஓராண்டு வரையில் லிஸ் ட்ரஸ் பரிமாறிய குறுந்தகவல்கள் அனைந்தும் ரஷ்ய உளவாளிகளால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு மீறல் குறித்து லிஸ் ட்ரஸ் மிகவும் கவலை கொண்டுள்ளதை அடுத்து அவரால் தூங்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
@AFP
தற்போது லிஸ் ட்ரஸ்ஸின் அந்த அலைபேசி அரசு அதிகாரிகள் வசம் இருப்பதாகவும், தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ரஷ்யா வசம் சிக்கியுள்ள தரவுகளின் அடிப்படையில் பிரித்தானிய அரசை புடின் நிர்வாகம் மிரட்டி பணியவைக்க வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
ஆனால், தனிப்பட்ட ஒருவரின் அலைபேசி ஊடுருவல் தொடர்பில் தற்போதை சூழலில் கருத்து தெரிவிக்க முடியாது எனவும், ஆனால் அரசுக்கு எதிரான ஊடுருவல்களை முறியடிக்க போதுமான பாதுகாப்பு அம்சங்கள் தயார் நிலையில் இருப்பதாக பிரித்தானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.