உக்ரைன் மீதான போரின் எதிரொலி.. ரஷ்ய டென்னிஸ் வீரர்களுக்கு தடை!
உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்ய டென்னிஸ் வீரர்களுக்கு, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் சிறந்த டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் ரஷ்ய டென்னிஸ் வீரர் டேனில் மெத்வதேவ் 2வது இடத்திலும், மற்றொரு ரஷ்ய வீரரான ஆன்ட்ரி ரூப்லேவ் 8வது இடத்திலும் உள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக இந்த இரண்டு வீரர்கள் உட்பட, பெலாரஸ் வீரர்களையும் சர்வதேச அளவில் பெரும்பாலான டென்னிஸ் அமைப்புகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தன. ரஷ்ய வீரர்கள் தனிப்பட்ட முறையில் விளையாடலாம், ஆனால் அவர்களது நாடு அல்லது கொடியின் கீழ் விளையாடக்கூடாது என கூறியிருந்தன.
அதனைத் தொடர்ந்து, இம்மாத தொடக்கத்தில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் விம்பிள்டனில் பங்கேற்பது குறித்து பிரித்தானிய அரசுடன் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அமைப்பு ஆலோசனை நடத்தியது. அதன் முடிவு மே மாதம் வெளியிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ரஷ்ய வீரர்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் டேனில் மெத்வதேவ், ஆன்ட்ரி ரூப்லேவ் மட்டுமின்றி மகளிர் டென்னிஸ் வீராங்கனையான அனஸ்டேசியா பாவ்லிசென்கோவாவும், ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை நடக்கவிருக்கும் விம்பிள்டன் டென்னிஸில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
பெலாரஸ் டென்னிஸ் வீரர்களுக்கு உறுதியாக தடை விதிக்கப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு பெலாரஸ் ஒரு இடமாக அறியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.