பிரித்தானிய கடற்கரையை ஒட்டி ரஷ்ய போர்க்கப்பல் பீரங்கி பயிற்சி: விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
இங்கிலாந்து கடற்கரையை ஒட்டிய பகுதியில் ரஷ்யா நேரடி வெடிபொருள் அடங்கிய பீரங்கி பயிற்சியை மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் பீரங்கி பயிற்சி
திங்கட்கிழமை பிரித்தானியாவின் பிளைமவுத் கடற்கரையில் இருந்து சுமார் 46 மைல் தூரத்தில், ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று நேரடி பீரங்கி பயிற்சியை செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, அந்த பயிற்சிக்கு பிறகு ரஷ்ய கப்பலின் நகர்வுகளை பிரிட்டன் ராயல் கடற்படை(British Royal Navy) தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த பீரங்கி பயிற்சிக்கு முன்னதாக ரஷ்யாவின் நியூஸ்ட்ராஷிமி போர் கப்பல் தங்களது துப்பாக்கிச் சூடு திட்டங்கள் குறித்து முன்னதாகவே அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராயல் நெவியின் HMS டைன் கப்பலுக்கு தகவல் அளித்திருந்ததாக தெரிவித்துள்ளது.
ரஷ்ய போர் கப்பலின் இந்த பீரங்கி பயிற்சியும், பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற ஆண்டி பர்ஹாம்(Andy Burnham) டவுனிங் வீட்டை வந்தடைந்த நிகழ்வும் ஒன்றாக இருந்தது தற்செயல் நிகழ்வா என்று பிபிசி எழுப்பிய கேள்விக்கு பிரித்தானிய பாதுகாப்புத் துறை பதிலளிக்க மறுத்துவிட்டது.

இருப்பினும் ரஷ்ய போர் கப்பலின் செயலுக்கு பிரித்தானிய அமைச்சரவை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெஸ் ஸ்ட்ரீட்டிங் இந்த சம்பவத்தை நாடகத்தனமானது மற்றும் பொறுப்பற்றது என்று வர்ணித்துள்ளார்.
மேலும் பிரித்தானிய அரசின் மற்றும் பிரதமரின் உறுதியை ரஷ்யா சந்தேகத்திற்கு இடமின்றி புரிந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |