கர்நாடகா குகைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட ரஷ்யப் பெண்ணும் இரண்டு பிள்ளைகளும்
கர்நாடகா மாநிலத்திலுள்ள காடு ஒன்றில் அமைந்துள்ள குகை ஒன்றிற்குள், ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும், அவரது இரண்டு மகள்களும் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
குகைக்குள் ரஷ்யப் பெண்ணும் இரண்டு பிள்ளைகளும்
கர்நாடகாவிலுள்ள ராம்தீர்த்த மலைப்பகுதியில் ரோந்து சென்ற பொலிசார், அங்கு ஓரிடத்தில் துணிகள் காயப்போடப்பட்டுள்ளதை கவனித்து அங்கு சென்றுள்ளார்கள்.
அப்போது, அங்கு ஒரு குகைக்குள் ஒரு பெண்ணும் அவரது இரண்டு மகள்களும் தங்கியிருந்த விடயம் தெரியவந்துள்ளது.
ரஷ்ய நாட்டவரான அந்தப் பெண்ணின் பெயர் மோஹி என்னும் நினா குட்டினா (40). மோஹியுடன், அவரது மகள்களான ப்ரேயா (6) மற்றும் அமா (4) ஆகிய இருவரும் அந்த குகைக்குள் இரண்டு வாரங்களாக தங்கியிருந்துள்ளனர்.
அவர்கள் எப்படி அந்த குகைக்குள் அவ்வளவு நாட்களாக தங்கியிருந்தார்கள், அவர்கள் எப்படி அங்கு வந்தார்கள் என விசாரிக்கும்போது, மோஹி பிஸினஸ் விசாவில் இந்தியா வந்ததும், அவர் கோவாவுக்குச் சென்றதும் தெரியவந்துள்ளது.
விடயம் என்னவென்றால், மோஹியின் விசா 2017ஆம் ஆண்டே காலாவதியாகியுள்ளது. அப்படியிருந்தும் இத்தனை ஆண்டுகளாக அவர் இந்தியாவில் தங்கியிருந்தது எப்படி, அவர் எதற்காக, எப்படி கர்நாடகாவிலுள்ள அந்தக் குகைக்குச் சென்றார் என்பது தெரியவில்லை.
ஆபத்தான காட்டில் பிள்ளைகளுடன் தங்கியிருந்த மோஹியை மீட்ட பொலிசார், அவரை பெண் சாமியார் ஒருவரின் ஆசிரமம் ஒன்றில் தங்க வைத்துள்ளார்கள்.
ரஷ்ய தூதரகத்துக்கு மோஹி குறித்து தகவலளிக்கக்கப்பட்டுள்ள நிலையில், அவரை ரஷ்யாவுக்கு நாடுகடத்தும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |