என் ஆட்டத்தில் மறக்கமுடியாத நினைவை ஏற்படுத்த உள்ளேன் - ருதுராஜ் கெய்க்வாட்
சென்னை அணியில் என் ஆட்டத்தின் மூலம் மறக்கமுடியாத நினைவை ஏற்படுத்த உள்ளேன் என்று ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
சென்னை-லக்னோ அணிகள் இன்று மோதல்
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று 7 மணிக்கு 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் நேருக்கு நேர் மோதவுள்ளன.
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் விளையாட இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி
இந்நிலையில், இப்போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல்முறையாக விளையாடப்போவது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. அணியில் நீண்ட துடுப்பாட்ட வரிசை இருப்பது எனக்கு சுதந்திரமாக துடுப்பாட உதவி செய்கிறது. சென்னை அணியின் காம்பினேஷன் மிகவும் சிறப்பாக உள்ளது. தொடர் செல்ல செல்ல அணியின் செயல்பாடு மேம்பட்டு விடும். இந்த ஆண்டு சென்னை அணியில் நான் நல்ல நினைவுகளை ஏற்படுத்த உள்ளேன் என்றார்.