ருவாண்டா திட்டம் முற்றிலும் தவறானது... பிரித்தானிய உள்துறைச் செயலரை கிழித்துத் தொங்கவிட்ட உயர் ஸ்தானிகர்
பிரித்தானியா, சட்டவிரோத புலம்பெயர்தலை கட்டுப்படுத்துவதற்காக, புகலிடக்கோரிக்கையாளர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்ப முயற்சித்துவருகிறது.
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் சட்டவிரோதமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையிலும், மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்றுள்ளது அரசு.
இந்நிலையில், புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் முற்றிலும் தவறானது என்று விமர்சித்துள்ளார் பிரித்தானியாவுக்கான ருவாண்டா நாட்டின் உயர் ஸ்தானிகர்.
Led By Donkeys
ரகசிய கமெராவில் சிக்கிய காட்சி
பிரித்தானியாவுக்கான ருவாண்டா நாட்டின் உயர் ஸ்தானிகரான ஜான்ஸ்டன் (Johnston Busingye) என்பவரை ரகசிய கமெராவுடன் சந்தித்த ஒரு பிரச்சாரக் குழுவினர், வர்த்தகம் குறித்துப் பேசுவதாக அவரை நம்பவைத்துள்ளனர்.
ஜான்ஸ்டனும் அதை நம்பி, தான் வீடியோ கமெராவில் பதிவு செய்யப்படுவதை அறியாமல், தன் மனதில் உள்ளதையெல்லாம், கொட்டிவிட்டார்.
முற்றிலும் தவறானது, ஒழுக்கக்கேடானது
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் குறித்து ஜான்ஸ்டனிடம் கேள்வி எழுப்பியபோது, அந்த திட்டம் முற்றிலும் தவறானது என்று கூறிய அவர், பிரித்தானியா தன்னை ஒரு இரக்கமுள்ள நாடு என கருதுவது ஒழுக்கக்கேடானது என்று கூறியதுடன், பிரித்தானியாவைக் கிழித்துத் தொங்கவிட்டுவிட்டார்.
பிரித்தானியா தன்னை இரக்கமுள்ள நாடு, அகதிகளுக்கான நாடு, பாதுகாக்கும் நாடு என இன்னமும் கருதுவது ஒழுக்கக்கேடானது என்று கூறிய ஜான்ஸ்டன், இவர்கள் 400 ஆண்டுகளாக கோடிக்கணக்கானவர்களை அடிமைகளாக்கினார்கள், இந்தியாவை சீரழித்தார்கள், சீனாவை சீரழித்தார்கள், ஆப்பிரிக்காவை சீரழித்தார்கள் என கொட்டித் தீர்த்துவிட்டார்.
பிரித்தானியா என்ன பாதுகாப்பான நாடா?
2018ஆம் ஆண்டு, ருவாண்டாவில், உணவுக்காக ஒரு கூட்டம் அகதிகள் ஆர்ப்பட்டம் நடத்தியபோது, சுமார் 12 அகதிகள் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
அப்படியானால், ருவாண்டா அகதிகளுக்கு பாதுகாப்பான நாடா என ஜான்ஸ்டனிடம் கேள்வி எழுப்பியபோது, அவர், அவர்கள் கொல்லப்பட்டது உண்மைதான், அதற்கென்ன, பிரித்தானியாவில் தினமும் ஒருவர் சுட்டுக் கொல்லப்படுகிறாரே, அது பிபிசி முதலான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறதே என்றார் சர்வசாதாரணமாக.
ஆக, ருவாண்டாவின் நிலை குறித்தும், புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் குறித்தும், ருவாண்டா உயர் ஸ்தானிகரே இப்படி அப்பட்டமாக விமர்சித்துள்ள நிலையில், பிரித்தானியா எப்படி ரியாக்ட் செய்யப்போகிறது என்பது தெரியவில்லை.
ஆனால், புலம்பெயர்வோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவது என கங்கணங்கட்டிக்கொண்டு ஒற்றைக்காலில் நிற்கும் பிரித்தானிய உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேனுக்கு மட்டும், இது மோசமான தலைக்குனிவு என்பதில் சந்தேகமில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |