கோலியின் கேப்டன்சி பறிப்புக்கு பின்னால் டிராவிட்? கொளுத்தி போட்ட பிரபல வீரர்
விராட் கோலியின் கேப்டன்சி பதவி பறிப்புக்கு பின்னால் ராகுல் டிராவிட் இருக்கிறார் என முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் கூறியுள்ளார்.
இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதால், பிசிசிஐ வட்டாரத்தில் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒருநாள் அணிக்கும் ரோகித் சர்மாவே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தற்போது விராட் கோலிக்கு பிசிசிஐ துரோகம் செய்துள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய டி20 அணியின் கேப்டன்சியில் இருந்து தாமாக பதவி விலகிய கோலி, ஒருநாள் அணியை தொடர்ந்து வழிநடத்தவே விரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத பிசிசிஐ 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும், இல்லையென்றால் நீக்கப்படுவீர்கள் என கெடு விதித்து அனைத்தையும் செய்துள்ளது.
எனினும் இதுகுறித்த உண்மை தன்மை தெரியவில்லை. இந்நிலையில் இது குறித்து பேசிய இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் சாபா கரீம், விராட் கோலி அதிரடியாக பதவியில் இருந்து தூக்கப்பட்டார் என்பதே சரியாக இருக்கும்.
விராட் கோலி சிறந்த ஒருநாள் அணி கேப்டனாக இருந்துள்ளார். இதுவரை 95 போட்டிகளில் 65 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். என்னைப் பொறுத்தவரை ராகுல் டிராவிட் அல்லது வேறு யாரேனும் ஒருவர் விராட் கோலியின் பதவி பறிப்புக்கு பின்னால் உள்ளனர் என நினைக்கிறேன்.
இந்திய அணியில் தனி தனி கேப்டன்சி என்ற முறையை விராட் கோலியிடம் பயிற்சியாளர் டிராவிட் எடுத்துக்கூறியிருக்கலாம். அவரிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்திருக்கலாம் என கூறியுள்ளார்.