வில்லியம்சன் செய்ததை கோலி செய்ய தவறிவிட்டார்! இந்தியா தோல்வி குறித்து முதல் முறையாக பேசிய சச்சின்
நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில், இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் அது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார்.
உலகக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 ஆட்டத்தில் நியூசிலாந்துஅணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்தது. இதன் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
இந்தியாவின் இந்த செயல்பாடு குறித்து முன்னணி வீரர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் இது குறித்து கூறுகையில், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணி இது ஒரு கடினமான நாளாக மாறிவிட்டது.
இது போன்ற நாட்களை நாம் சந்தித்துள்ளோம். இதனால் இதை எல்லாம் மறந்துவிட வேண்டும். ஒரு சில நேரங்களில் நாம் என்ன முயன்றாலும், எதற்குமே பலன் கிடைக்காது. அது போன்று தான் இன்றைய நாள் அமைந்துவிட்டது.
இதைத் தவிர பேசுவதற்கு ஒன்றும் இல்லை. நியூசிலாந்து அணி பந்து வீச்சில் எப்படி ஒரு அற்புதமான உத்தியை பயன்படுத்தியதோ, அதை இந்திய அணி செய்ய தவறிவிட்டது. நியூசிலாந்து அணியின் கேப்டன் ஆன, வில்லியம்சன் பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி பந்துவீச செய்தார்.
இதனால் 6 முதல் 10 ஓவர்களில் இந்திய அணி வெறும் 13 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதுவே இந்திய அணியின் தோல்வியின் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.