மகனின் ஆட்டத்தை நேரில் பார்க்க விரும்பாத சச்சின் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
தனது மகனின் ஆட்டத்தை நேரில் பார்க்கமாட்டேன் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் பெங்களூருவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சினின் மகனான அர்ஜூன் தெண்டுல்கரை ரூ.30 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 22 வயதாகும் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் உள்ளூர் 20 ஓவர் போட்டியில் மும்பை அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். மும்பை ரஞ்சி அணியில் இடம் பெற்றுள்ளார்.
இதனிடையே மகனின் ஆட்டம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சச்சின் பெற்றோர் தங்களது பிள்ளைகள் விளையாடுவதை நேரில் பார்க்கும் போது அவர்கள் தேவையில்லாத மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். இதை தவிர்க்க நான் அர்ஜூன் விளையாடுவதை நேரில் பார்க்கப்போவதில்லை.
அர்ஜூன் எந்த நெருக்கடியும் இல்லாமல் கிரிக்கெட்டை நேசித்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன் எனவும்,ஒருவேளை அவரது ஆட்டத்தை நான் நேரில் பார்க்க நேர்ந்தாலும், எங்கோ ஒரு இடத்தில் மறைந்து இருந்து பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார்.