சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் பெண்கள் மீதான வன்முறை: அதிர்ச்சி தரும் எண்ணிக்கை
சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் 30 வயது பெண் ஒருவர் கணவரால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சுவிஸில் இந்த ஆண்டில் இதுவரை 23 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூரிச் பெண் படுகொலை தொடர்பில் அவரது 46 வயது துருக்கிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டுமின்றி குறித்த நபர் தொடர்பில் பொலிசார் ஏற்கனவே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், மிரட்டல் விடுத்ததாக கூறி கடந்த ஜூன் மாதத்தில் இவர் மீது வழக்கு பதியப்பட்டிருந்து. இச்சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின்னர் Glarus பகுதியில் 30 வயது பெண் ஒருவர் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
துப்பாக்கி குண்டு காயங்களுடன் காணப்பட்ட அவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் 27 வயது இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட பெண்மணிக்கும் இந்த இளைஞருக்கும் என்ன உறவு என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டில் இதுவரை படுகொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
பொலிசார் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இதுவரை 23 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 8 பேர்கள் கொலை முயற்சியில் இருந்து தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 16 பெண்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததும் 5 பெண்கள் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளதும் தெரிய வந்துள்ளது.