லண்டன்வாசிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்! இரவு நேர பயணம் தொடர்பில் மேயர் சாதிக் கான் சூசகமாக சொன்ன முக்கிய செய்தி
லண்டனில் இரவு நேர சுரங்க இரயிலை (night tube) இயக்க ஆயிரக்கணக்கானோர் மனுவில் கையெழுத்திட்ட நிலையில் அதை மீண்டும் இயக்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக மேயர் சாதிக் கான் கூறியுள்ளார்.
இரவு நேர சுரங்க இரயில்கள் என்பது லண்டன் பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவுகளில் பயணிகளை ஏற்றி செல்லும் சுரங்க ரயிலின் ஒரு பகுதியாகும்.
இந்த சுரங்க இரயிலானது கடந்தாண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் ரத்து செய்யப்பட்டது, கொரோனா காரணமாக இச்சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இரவு நேர சுரங்க இரயில் சேவையை மீண்டும் கொண்டு வர திட்டம் உள்ளதாக மேயர் சாதிக் கான் கூறியுள்ளார்.
இது குறித்து சாதிக் கான் கூறுகையில், Transport for London மீண்டும் இரவு நேர சுரங்க இரயில் சேவையை கொண்டு வர கடுமையாக உழைத்து வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் இது தொடர்பான அறிவிப்பு வரும்.
வருவாய் பற்றாக்குறை மற்றும் இரயில் ஆபரேட்டர் பற்றாக்குறை காரணமாக இன்னும் திறக்கப்படவில்லை.
இரவு நேர சுரங்க இரயிலின் முக்கியத்துவத்தை நான் புரிந்து கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.
இரவில் வீடு திரும்பும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ள நிலையில் அதற்கு மத்தியில் தான் சில வாரங்களில் இரவு நேர சுரங்க இரயிலை மீண்டும் கொண்டு வருவதற்கு வேலை நடந்து வருவதாக சாதிக் கான் சூசகமாக தெரிவித்துள்ளார்
சாரா எவரார்ட் மற்றும் சபீனா நெஸ்ஸா ஆகியோரின் கொலைகளை அடுத்து லண்டன் மேயர் இரவு நேர சுரங்க இரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தும் மனு சமீபத்தில் 80,000 கையெழுத்துக்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.