வீரரின் குற்றச்சாட்டுக்கு, இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிலடி
இந்திய வீரர் விருத்திமான் சஹாவின் புகார் தன்னை காயப்படுத்தவில்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வந்த விருத்திமான் சஹா கடந்த சில தொடர்களாக தனது சிறப்பான பங்களிப்பை அணிக்கு தர தவறியதை அடுத்து அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தான் அணியில் இருக்கும் போதே தன்னை ஓய்வு முடிவை அறிவிக்குமாறு அறிவுரை வழங்கிதாக விருத்திமான் சஹா குற்றம்சாட்டி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட், விருத்திமான் சஹாவின் கருத்து தன்னை காயப்படுத்தவில்லை எனவும், அவர் மீது தனக்கு மிகுந்த மரியாதையை இருப்பதாகவும் தெரிவித்தார்.
விருத்திமான் சஹா இந்திய அணிக்காக ஆற்றிய பங்களிப்பை நான் மிகவும் மதிக்கிறேன்.
அவரது எதிர்காலம் மற்றும் வரும்காலத்தில் இந்திய அணியில் அவரது இருப்பிடம் கவலை அளிப்பதாக இருந்ததால் அவருடன் தனிப்பட்ட உரையாடலில் ஈடுபட்டேன்.
மேலும் அவர் நேர்மையும், தெளிவும் நிறைந்தவர் என்று நான் கருதியதின் அடிப்படையிலே அவருக்கு இந்த அறிவுரையை வழங்கியதாக தெரிவித்தார்.
ஒரு போட்டி தொடங்குவதற்கு முன்பும் அதன் பின்பும் ஓய்வு அறைக்கு சென்று வீரர்களுடன் உரையாடி அறிவுரை வழங்குவது எனது வழக்கம் என்றும், இதுபோன்ற நிகழ்வுகளால் அதனை தான் மாற்றி கொள்ள போவது இல்லை எனவும், அதை வீரர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.