சுவிற்சர்லாந்தில் கோலாகலமாக நடைபெற்ற சைவமும் தமிழும் போட்டிநிகழ்வு 2023
ஆண்டுதோறும் சைவநெறிக்கூடத்தால் முன்னெடுக்கப்படும் எம் செந்தமிழ்ச் செல்வங்களுக்கான "சைவமும் தமிழும் போட்டிநிகழ்வு 2023" கடந்த 29.10.23 பேர்ன், ஜெனீவா, லவுசான், லசத்போம், மர்த்தினி ஆகிய ஐந்து இடங்களில் மிகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இப்போட்டியில் பங்கெடுத்து நற்பெறுபேறுகள் பெற்ற அனைத்துப் போட்டியாளர்களுக்கும் மதிப்பளிப்பும், பங்கெடுத்தமைக்கான சான்றிதழும், நினைவுப்பரிசும், முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுக்கேடயமும், வெற்றிச் சான்றிதள்களும் வழங்கும் பரிசளிப்பு-விழா தமிழுக்கு உயிர்பிறந்ததும் உயிர்கொடுத்ததுமான கார்த்திகை 26ல் (26.11.2023 ஞாயிறு) பேர்ன் சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் மண்டபத்தில் நல்லழகுடன் நடைபெற்று நிறைந்தது.
தாயகத்து தவில் நாயனக்கலைஞர்களில் மங்கல இசையுடன் நிகழ்வு காலை 10.00 மணிக்கு தொடங்கப்பெற்றது.
திருமதி. கார்த்திகா முரளிதரன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். 10.30 மணிக்கு சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர், இணைப்பாளர் சைவநெறிக்கூடம் நல்லாசி வாழ்த்து வழங்கினார்.
இதன்போது போட்டியின் நோக்கம் பிள்ளைகளை ஊக்குவிப்பது ஆகும். மேலும் குழந்தைகளின் மனதில் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கினையும், உளத்திறனை வளர்க்கவும் ஊக்கப்படுத்தவும் இப்போட்டி வழிசெய்கின்றது.
அன்புமிக்க பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை இப்போட்டியில் பங்கெடுக்கச்செய்து இளந்தமிழ்ச் செல்வங்களின் தமிழ்த்திறன் வளர்க்க ஊக்கம் அளிக்கும் உங்களுக்கு எமது நன்றி எனத் தெரிவித்தார்.
தேவாரம், திருவாசகம், திருப்புராணம், திருப்புகழ், திருக்குறள், திருக்கதை, திருநிறம்தீட்டல் எனும் போட்டிகள் கடந்த 29. கன்னித்திங்கள் நடைபெற்றிருந்தது.
பரிசுகளை நொய்யென்பூர்க் மாநிலத்தில் இருந்து வருகை அளித்த ஆசிரியர்கள் திருமதி. ஜீவா, திருமதி. சயந்தினி, ஜெனீவா ஆசரியை இராஜேஸ்வரி, பேர்ன் வள்ளுவன் பாடசாலை அதிபர் திரு. முருகவேள், படைப்பாளி திரு. இன்பம் அருளையா, சைவமும் தமிழும் போட்;டிப்பொறுப்பாளர் திரு. வசந்தன், ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்கள் திருமதி. மாலா, சிவத்திரு. விக்னேஸ், சிவத்திரு. சுரேஸ்குமார், சிவத்திரு. ஜெயக்குமார், சிவத்திரு. சசிக்குமார், சிவத்திரு. ஜெயக்குமார், சிவத்திரு. டிலக்சன், ஆகியோர் வழங்கி இருந்தனர்
26.11.23 பரிசளிப்புவிழாவில் திருவேடம் தாங்கும் நிகழ்வு 11.45 மணிக்கு நடைபெற்றது. 40 குழந்தைகள் இறை- மற்றும் சைவத் தமிழ்ப் பெரியோர் திருவுருவங்களைத் தாங்கி வலம்வந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |