மாட் ஹான்காக் பதவி விலகிய 90 நிமிடங்களில் புதிய சுகாதார செயலாளர் நியமனம்
பிரித்தானியாவின் புதிய சுகாதார செயலாளராக சஜித் ஜாவித் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாட் ஹான்காக் தனது பெண் உதவியாளர் Gina Coladangelo-உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் கடந்த வாரம் வெளியாகின.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, சனிக்கிழமை இரவு ஹான்காக் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
பிரதமர் அலுவலகம், அவர் பதவி விலகியதாக அறிவித்த அடுத்த 90 நிமிடங்களில், முன்னாள் சான்சலர் மற்றும் உள்துறை செயலாளருமான சஜித் ஜாவித், பிரித்தானியாவின் புதிய சுகாதார செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று முதல் தனது பணியை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சஜித் ஜாவித் தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்த முக்கியமான நேரத்தில் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு செயலாளராக பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு கவுரவமாக கருதுகிறேன்.
தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு பங்களிப்பு செய்வதையும், அமைச்சரவையில் இருந்து எனது நாட்டுக்கு மீண்டும் ஒரு முறை சேவை செய்வதையும் நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.
மாட் ஹான்காக் பதவி விலகியதைத் தொடர்ந்து, கொலடங்கெலோவும் தனது பதவியை விட்டு விலகுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.