இலங்கை நாடாளுமன்றத்தில் பதிவுசெய்த ரகசிய வாக்கை வெளியிட்ட சஜித்! வைரலாகும் புகைப்படம்
இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் தான் பூர்த்தி செய்த வாக்குச்சீட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சமூக வலைதளத்தில் வெளியிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடந்த துணை சபாநாயகர் பதவிக்கான ரகசிய வாக்கெடுப்பில், தான் பதிவு செய்த வாக்குச்சீட்டை (குடவோலை) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
‘செயல்கள் சொற்களை விட சத்தமாக பேசுகின்றன’ என குறிப்பிட்டு, தான் பதிவு செய்த ரகசிய வாக்குச்சீட்டை சஜித் பிரேமதாச தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த துணை சபாநாயகர் பதவிக்கான ரகசிய வாக்கெடுப்பில் அவர் ரோகினி கவிரட்னவுக்கு வாக்களித்ததை சஜித் வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, இலங்கை நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் பதவிக்கு இரண்டு வேட்பாளர்கள் முன்மொழியப்பட்டனர்.
எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா கட்சி சார்பில் ரோகினி கவிரட்னவை துணை சபாநாயகராக, ஐசமகி ஜன பலவேகயா கட்சித்த தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார்.
ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அஜித் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்டது.
இதனையடுத்து நடந்த ரகசிய வாக்கெடுப்பில், துணை சபாநாயகராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அஜித் ராஜபக்ச 109 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். ரோகினி கவிரத்னாவுக்கு ஆதரவாக 78 வாக்குகள் கிடைத்தன.
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் எம்.பி நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ACTIONS WILL ALWAYS SPEAK LOUDER THAN WORDS. #ForwardTogether pic.twitter.com/0Bcekpsbxz
— Sajith Premadasa (@sajithpremadasa) May 17, 2022