இந்தியாவால் எப்படி வெளிநாட்டில் வெற்றி பெற முடிகிறது? ரகசியத்தை கண்டுபிடித்து சொன்ன சல்மான் பட்
இந்திய அணியால் எப்படி வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாட முடிகிறது என்ற ரகசியத்தை, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.
கோலி தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் திகதி(டிசம்பர் 2021) துவங்கவுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்திய அணி இந்த அளவிற்கு ஒரு சிறப்பான ஆட்டத்தை கொடுக்க என்ன காரணம் என்பது குறித்து ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட்டிடம் சமூகவலைத்தளத்தில் கேட்டுள்ளார்.
அதற்கு சல்மான் பட், இந்திய அணியின் சீனியர் அணி வெளிநாட்டு சுற்றுபயணங்களுக்கு செல்வதற்கு முன், இந்தியா தன்னுடைய ஏ அணிகளை அனுப்பி அங்கு விளையாட வைக்கிறது.
இது அங்கு விளையாடும் இந்திய வீரர்களுக்கு பெரிதும் உதவுகிறது. ஏனெனில் ஏ அணியில் இருக்கும் சில வீரர்கள் டெஸ்ட் தொடரின் போது, இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவின் ஏ அணிகள், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது.
தற்போது இந்திய டெஸ்ட் அணியில் தேர்வாகியுள்ள முகமது சிராஜ் இதற்கு முன்பு தன்னுடைய முதல் தர போட்டிகளில் விளையாடுவதற்காக, வெளிநாடுகளில் 4 நாட்கள் கொண்ட போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்தியா செய்யும், இதை மற்ற நாடுகள் இப்போது செய்வதில்லை. முன்னர், அவுஸ்திரேலியா ஏ அணி, பாகிஸ்தானுக்கு வரும் அல்லது இலங்கை ஏ அணியோ அல்லது தென்னாப்பிரிக்கா ஏ அணியோ கூட இங்கு வருவதை பார்த்திருக்க முடியும்.
ஆனால், தற்போது டெஸ்ட் விளையாட்டின் பாரம்பரிய வடிவத்தில் இருந்து சில நாடுகள் விலகிச் செல்கின்றன. அப்படி விலகிச் செல்லும் போது, நீண்ட வடிவத்தில் விளையாடுவதற்கான மனநிலையை நம்மால் வளர்க்க முடியாது.
இதுவே இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாட முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.