உங்களுக்கு என்ன தான் பிரச்சனை? பொறுமையிழந்து வைடு பந்துக்கு ரிவியூ கேட்ட சாம்சன்!
கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் சஞ்சு சாம்சன் பொறுமை இழந்து வைடு பந்துக்கு ரிவியூ கேட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.
இந்த போட்டியில் கள நடுவர் சரியாக வீசப்பட்ட பந்துகளை வைடு கொடுத்தது வீரர்களையும், ரசிகர்களையும் எரிச்சலடைய செய்தது.
குறிப்பாக, இரண்டாவது இன்னிங்சின் 19வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா வீசிய 3வது பந்து வைடாக சென்றது. இதற்கு மாற்றாக போடப்பட்ட பந்தில் பவுண்டரி சென்றதால் ராஜஸ்தான் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் கடுப்பில் இருந்தார்.
அதன் பின்னர் 4வது பந்தையும் பிரசித் கிருஷ்ணா Outside off stump ஆக வீச, அதனை துடுப்பாட்ட வீரர் ரிங்கு சிங் அடிப்பதற்காக வைடு எல்லை வரை சென்றுவிட்டார். எனினும் கள நடுவர் அதனை வைடு என்று கூறினார். இதனால் பொறுமையிழந்த சஞ்சு சாம்சன், வைடு என்று அறிவிக்கப்பட்ட நடுவரின் முடிவை எதிர்த்து ரிவியூ கேட்டார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
எனினும் வைடு முடிவுகளை 3வது நடுவர் மாற்ற முடியாது என்பதால், அந்த பந்து வைடாகவே கருதப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதே ஓவரில் கடைசி பந்தையும் கிருஷ்ணா Outside off stump ஆக வீச, அத்தனையும் நடுவர் வைடு என்று அறிவித்தார்.
உடனே அவரிடம் சென்ற சாம்சன் 'உங்களுக்கு என்ன தான் பிரச்சனை' என்பது போல் சில விநாடிகள் பேசிவிட்டு வந்தார். ஒருவேளை நடுவரின் முடிவு சரியாக இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவே மாறியிருக்கும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.