தோல்வியிலும் சாதனை.. தோனியை மிஞ்சிய சஞ்சு சாம்சன்!
ஐபிஎல்லில் அதிகமுறை நாணய சுழற்சியில் தோல்வியுற்ற கேப்டன் என்ற தோனியின் சாதனை ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் மிஞ்சியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த குவாலிபையர்-1 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இதன்மூலம் குஜராத் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் நாணய சுழற்சியில் தோல்வியடைந்தார். நடப்பு தொடரில் அவர், 15 போட்டிகளில் 13 முறை நாணய சுழற்சியில் தோல்வி அடைந்துள்ளார்.
இதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி, கடந்த 2012ஆம் ஆண்டு சீசனில் 12 முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்தது மோசமான சாதனையாக இருந்த நிலையில், தற்போது சாம்சன் அதனை முறியடித்துள்ளார். எனினும், சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்று குவாலிபையர் வரை வந்துள்ளது.
கடந்த 2013 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் 11 முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.