மாணவி சொன்ன பொய்... படுகொலையில் முடிந்த பயங்கரம்: உலக நாடுகளையே உலுக்கிய வழக்கு
பிரான்சில் 13 வயது மாணவி சொன்ன ஒரு பொய், ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட காரணமாக அமைந்ததுடன், உலக நாடுகளில் பலவற்றிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தலைவெட்டி கொலை செய்யப்பட்ட ஆசிரியர்
பாரீஸ் பள்ளி ஒன்றில், வரலாறு பாடவேளையின்போது Samuel Paty என்ற ஆசிரியர், தான் முகமது நபியின் நிர்வாணப் படங்களை காட்ட இருப்பதாகவும், இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறலாம் என்றும் கூறியதாக ஒரு 13 வயது மாணவி தன் தந்தையிடம் சென்று கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, பத்து நாட்களுக்குப் பின் Samuel Paty தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற Abdullakh Anzorov என்ற தீவிரவாதியும் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டான்.
மாணவி சொன்ன பொய்... படுகொலையில் முடிந்த பயங்கரம்
அந்த மாணவி வகுப்புக்கு அவ்வப்போது மட்டம் போட்டதால், ஆசிரியர் அவளை சஸ்பெண்ட் செய்துள்ளார். அது அவளது தந்தைக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு பொய் சொல்லி கவனத்தை வேறு பக்கம் திருப்ப முயன்றுள்ளாள் அந்த மாணவி.
அதற்காக, தனது வரலாற்று ஆசிரியர் தான் முகமது நபியின் நிர்வாணப் படங்களை காட்ட இருப்பதாகவும், இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறலாம் என்றும் கூறியதாக தன் தந்தையிடம் சென்று பொய் சொல்லியிருக்கிறாள் அந்த பெண்.
மகள் சொல்லியதை நம்பிய அவளது தந்தையான Brahim Chnina (48), ஆசிரியர் Samuel Patyக்கு எதிராக பேஸ்புக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டதுடன், அவர் மீது பள்ளியிலும், பொலிசாரிடமும் புகாரும் அளித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவிய இந்த செய்திகள், தீவிரவாத எண்ணம் கொண்ட செசன்ய அகதியான Abdoullakh Anzorov (18) என்பவனைச் சென்றடைய, அவன் ஆசிரியர் Samuel Patyயை தலையை வெட்டிக் கொன்றுவிட்டான். அவனை பொலிசார் சுட்டுக்கொன்றுவிட்டார்கள்.
ஆனால், அந்த வகுப்பிலிருந்த மாணவ மாணவிகள் பலரும், ஆசிரியர் கார்ட்டூன்கள் குறித்து கூறும்போது அந்த மாணவி வகுப்பிலேயே இல்லை என்றும், ஆசிரியர் யாரையும் வகுப்பை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தவில்லை என்றும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்கள். ஆக, அந்த மாணவி சொன்னது பொய் என பின்னர்தான் தெரியவந்தது.
விசாரணை துவக்கம்
இந்த வழக்கில் தற்போது ஆறு பதின்ம வயதினர் பிரான்சில் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்கள். பொய் சொன்ன அந்த மாணவிக்கு இப்போது 16 வயதாகிறது.
ஆசிரியர் Samuel Patyயை தலையைத் துண்டித்துக் கொலை செய்த Abdoullakh Anzorovக்கு அவரை அடையாளம் தெரியாது. ஆகவே, அந்த மாணவி படித்த அதே பள்ளியில் படித்த 14, 15 வயதுடைய ஐந்து மாணவர்கள், ஆசிரியரை Abdoullakh Anzorovக்கு அடையாளம் காட்டிக்கொடுத்திருக்கிறார்கள். பதிலுக்கு அந்த மாணவர்களுக்கு அவர் 300 முதல் 350 யூரோக்கள் பணம் கொடுத்திருக்கிறார்.
Image: AFP via Getty Images
தற்போது அந்த மாணவர்களுக்கு 17, 18 வயதாகிறது. ஆக, இரண்டு கொலைகளுக்கு காரணமாக அமையும் வகையில் பொய் சொன்ன அந்த மாணவியும், கொலையாளிக்கு உதவிய மாணவர்களும் நேற்று பாரீஸ் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் செய்யப்பட்டார்கள்.
டிசம்பர் 8ஆம் திகதி வரை விசாரணை நடைபெற உள்ள நிலையில், தற்போதைய சூழலில் அவர்கள் ஆறுபேருக்கும் இரண்டரையாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அவர்களில் சிலர் 18 வயதை எட்டியுள்ளதால், தண்டனை மாற்றப்படுவதுடன், அவர்களைக் குறித்த அடையாளங்களும் வெளியிடப்படலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |