அஸ்வின் ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறியது ஏன்?
சஞ்சு சாம்சன் விளக்கம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறியது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 165 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்ததால் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணி பேட்டிங்கின்போது அஸ்வின் மற்றும் ஹெட்மயர் களத்தில் இருந்தனர். அப்போது அஸ்வின் 28 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, 19வது ஓவரின் இரண்டாவது பந்தை சந்தித்த பின்னர் ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறினார். அவருக்கு பதிலாக ரியான் பராக் களமிறங்கினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் வீரர் ஒருவர் ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறுவது இதுதான் முதல் முறை என்பதால் இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. போட்டி முடிந்த பின்னர் அஸ்வினின் ரிட்டயர்ட் அவுட் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், 'இது அணி எடுத்த முடிவாகும்.இந்த சீசன் துவங்குவதற்கு முன்பே இதுகுறித்து பேசியிருந்தோம். புதிதாக செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முடிவினை எடுத்தோம். இது முழுக்க முழுக்க அணியின் திட்டடம் தான்' என தெரிவித்தார்.