25 வயது பெண்ணை திருமணம் செய்த 45 வயதான விவசாயி தற்கொலை
இந்தியாவில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டதன் மூலம் பிரபலமான 45 வயதான விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம் துமகூரின் அக்கிமரி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா (45). இவருக்கும், மோகனா (25) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 19ல் திருமணம் நடந்தது.
அந்த சமயத்தில் இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இதனால், சங்கரப்பா மிகுந்த பிரபலமடைந்தார். தொடர்ந்து, திருமணம் முடிந்த பின்பும் சங்கரப்பா தனது மனைவியுடன் டூயட் பாடி, ஆடுவதை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
20 வயது வித்தியாசத்தில் உள்ள இளம்பெண்ணை திருமணம் செய்து ஆட்டம், பாட்டம், காதல் என வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்த சங்கரப்பாவின் வாழ்வை பார்த்து யார் கண்பட்டார்களோ, என்னவோ.. கடந்த சில நாட்களாக அவரது குடும்ப வாழ்க்கை தலைவலியாகவே இருந்துள்ளது.
மனைவிக்கும், தாயுக்கும் இடையேயான சண்டையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை அவரது தோட்டத்தில் துாக்கிட்ட நிலையில் சங்கரப்பா பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
சங்கரப்பா தற்கொலை குறித்து அவரது மனைவி மோகனா கூறும்போது, நானும், என் கணவரும் நன்றாக இருந்தோம். ஆனால் என் மாமியார் 15 நாளுக்கு ஒரு முறை என்னிடம் சண்டை போட்டு வந்தார்.
அடிக்கடி என்னை வெளியில் போவதாக குற்றம் சாட்டினார். என் தாய், தந்தையுடன் கூட அவர் பேச விடவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் எங்களால் குடும்பம் நடத்த முடியாது என கணவர் கூறினார். அதற்கு மாமியார், 'செத்து போ' என என் கணவரை திட்டினார்.
இதனால் கோபத்தில் வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை. காலையில் தான் விஷயம் தெரிய வந்தது. நான் தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளேன் என்று அவர் கண்ணீர் மல்க கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.