வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசை.. சென்னை வெள்ளப்பெருக்கு குறித்து சந்தோஷ் நாராயணன் கருத்து
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார்.
தனித்தீவான சென்னை
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் சூழ்ந்ததால் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால், மக்களது இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்து சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது, இந்த மிக்ஜாம் புயலானது சென்னையை விட்டு விலகி தெற்கு ஆந்திரத்தின் பாபட்லா அருகே 100 கி.மீ தொலைவில் கரையை கடந்து வருகிறது.
இந்நிலையில், காரப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டை மழை நீர் சூழ்ந்துள்ளதால் எங்களை மீட்க வேண்டும் என நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, விஷ்ணு விஷாலையும், தனது தாயின் மருத்துவத்துக்காக தங்கியிருந்த அமீர் கானையும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சந்தோஷ் நாராயணன் பதிவு
இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயாணன் மழை நீர் தேங்குவது குறித்து தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், குறைந்தது முழங்கால் அளவு தண்ணீர் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பகுதியில் குறைந்தது 100 மணிநேரம் மின்வெட்டு என்பதும் கடுமையான உண்மை.
இந்த ஆண்டு மழை ஏற்கனவே புதிய வரையறைகளை அமைத்துள்ளது. வேடிக்கை என்னவென்றால், வரலாற்று ரீதியாக கொளப்பாக்கம் ஒரு ஏரியோ அல்லது 'தாழ்வான' பகுதியோ அல்ல. இங்கு, ஏராளமான திறந்தவெளி நிலங்களும், குளங்களும் உள்ளன.
வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவை மழை நீர் மற்றும் கழிவுநீரை ஒரே ஒரு பாசனக் கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது. அது ஒவ்வொரு முறையும் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் குடியிருப்பாளர்களை உண்மையில் பாதிக்கிறது. இந்த நேரத்தில் யாராவது நோய்வாய்ப்படுவது அல்லது மருத்துவ எமர்ஜென்ஸியில் இருப்பது போன்றவை ஏற்பட்டு மரணத்தைக் கொண்டு வருகிறது.
மீட்பு மற்றும் பிற முக்கியமான தேவைகளுக்கு உதவவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் நிரந்தரமாக உள்ளன. சென்னைவாசிகளின் ஆன்மாவுக்குப் பாராட்டுகள், நான் எங்கு சென்றாலும் மிகவும் நெகிழ்ச்சியும் நேர்மறையும் இருக்கிறது. தீர்வுக்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன்.
எனக்கு நியாயமற்ற எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனால் இப்போது இருக்கும் விஷயங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட நீங்கள் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்." எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |