நெய்மணக்கும் சப்போட்டா பழ ரவா கேசரி!
சப்போட்டா பழுப்பு நிறத்தில் பழுப்பு நிற சதைப்பற்றை கொண்டிருக்கும் இனிப்பு நிறைந்த பழம்.
சப்போட்டாவை ஜூஸாக்கி குடித்தாலும், அப்படியே சாப்பிட்டாலும் சுவை அதிகமாக இருக்கும். இது சீஸனில் கிடைக்கும் பழம்.
இந்த குளிர் காலத்தில் உங்கள் உணவில் நீங்கள் பழம் சேர்க்க விரும்பினால் கண்டிப்பாக சப்போட்டாவை சேர்க்கலாம். இது மிகவும் சுவையானது.
இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. வைட்டமின் சி கொண்டிருப்பதால் இது பாக்டீரியா தொற்றுக்களை தடுக்க செய்கிறது. இதில் மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன.
சப்போட்டா பழத்தில் அப்படியே சாப்பிடுவது அல்லது ஜூஸ் போட்டு குடிப்பது போன்ற வழக்கமானமுறையில் சாப்பிடுவதைவிட சப்போட்டாவில் கேசரி செய்த்து சாப்பிட்டால் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
- சப்போட்டா பழம்- 8
- சர்க்கரை- 1/2கப்
- ரவை- 1/2கப்
- பால்- 1/4கப்
- நெய்- 1/4கப்
- பாதம், முந்திரி, பிஸ்தா- 1/2கப்
- ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்
செய்முறை
நன்கு பழுத்த சப்போட்டா பழங்களை எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
தோல் நீக்கிய சப்போட்டா பழங்களை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும்.
அதன்பிறகு ஒரு நான்ஸ்டிக் கடாயில் நெய் சேர்த்து சூடானதும், நறுக்கி தயாராக வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு வறுத்து தனியே எடுத்து வைக்க வேண்டும்.
அதே கடாயில் ரவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் கொஞ்சம் பால் சேர்த்து கலந்துவிடவும்.
அதன்பிறகு சர்க்கரை சேர்த்து கட்டி ஏற்படாமல் நன்கு கலக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள சப்போட்டா விழுது, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
மேலும் கொஞ்சம் பால் சேர்த்து இந்த கலவையை மூடி வைக்க வேண்டும். பின்னர் வறுத்து வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சப்போட்டா பழ கேசரி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |