மோசமான நபருக்கு இளவரசர் மனைவி எழுதிய மன்னிப்புக் கடிதம்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி
பிரித்தானிய மன்னரான சார்லசின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூ, மோசமான அமெரிக்கக் கோடீஸ்வரர் ஒருவருடன் தொடர்பிலிருந்த விடயம் ராஜ குடும்பத்துக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியதை மறக்கமுடியாது.
இந்நிலையில், ஆண்ட்ரூவின் மனைவியும் அந்த மோசமான நபருடன் தொடர்பிலிருந்தது தெரியவந்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மோசமான நபருடன் தொடர்பிலிருந்த இளவரசர் மனைவி
அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவராவார்.
அவருடன் தொடர்பிலிருந்தவர்களில் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவும் ஒருவர் என்பதை இப்போது பலரும் அறிந்திருக்கக்கூடும்.
இந்நிலையில், ஆண்ட்ரூவின் மனைவியான சாரா ஃபெர்குசனும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்துள்ளது.
பத்து ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த ஆண்ட்ரூவும் சாராவும் 1996ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இந்த சாராவுக்கு, கடன்களை அடைப்பதற்காக, அமெரிக்க கோடீஸ்வரரான எப்ஸ்டீன் 15,000 பவுண்டுகள் கொடுத்து உதவியுள்ளார்.
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம், அது குறித்து Evening Standard என்னும் ஊடகம் சாராவிடம் கேள்வி எழுப்பியபோது, தான் எப்ஸ்டீனுடன் பழகியது தவறு என்றும், இனி அவருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இருக்காது என்றும், குழந்தைகளை சீரழிப்பவர்களை தான் வெறுப்பதாகவும் கூறியிருந்தார் சாரா.
ஆனால், அடுத்த மாதமே, அதாவது, ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி, எப்ஸ்டீனுக்கு சாரா அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று தற்போது லீக் ஆகியுள்ளது.
அந்த மின்னஞ்சலில், தான் Evening Standard ஊடகத்துக்குக் கொடுத்த பேட்டிக்காக எப்ஸ்டீனிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் சாரா.
தான் எப்ஸ்டீனை குழந்தைகளை சீரழிப்பவர் என்று கூறவில்லை என்றும், தான் சிறுபிள்ளைகளுக்கான புத்தகங்கள் எழுதுபவர் என்பதால் தான் அப்படி நடந்துகொள்ள நேர்ந்ததாகவும் கூறியுள்ள சாரா, தான் எப்ஸ்டீனை கைவிட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார் சாரா.
ஆக, இளவரசர் ஆண்ட்ரூ மட்டுமல்ல, அவரது முன்னாள் மனைவியும் மோசமான குற்றவாளியான எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த உண்மை வெளியாகி பரபரப்பை உருவாக்கியதும், சாராவை எப்ஸ்டீன் மிரட்டியதாகவும் அதற்காகவே அவருக்கு அப்படி ஒரு மின்னஞ்சலை சாரா அனுப்பியதாகவும் அவரது செய்தித்தொடர்பாளர் தற்போது தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |