எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என மீனா போராடினார்! நடிகர் சரத்குமார்
மீனாவின் கணவர் இறந்துவிட்டார் என்பது தெரிந்தவுடன் நாங்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானோம் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், ரமேஷ் கண்ணா, ரகுமான், நாசர், மன்சூர் அலிகான் ஆகியோரும், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர் சி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் நடிகை குஷ்பு, நடன இயக்குனர் கலா, காயத்ரி ரகுராம், அமைச்சர் மா.சுப்ரமணியன், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். வித்யாசாகரின் இறுதி ஊர்வலம் சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கியது. இதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். பெசன்ட் நகர் மின் மயானத்தில் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக மீனாவின் கணவர் இறப்பு குறித்து சரத்குமார் கூறுகையில், 'உடல்நிலை சரி இல்லாமல் இருந்தார் என்பது எங்களுக்கு தெரியும். இருந்தாலும் எப்படியும் அவர் குணமடைந்துவிடுவார் என மீனாவிடம் நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து கூறி வந்தனர். அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் மீனா போராடினார்.
அவர் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் நாங்கள் எல்லோரும் இருந்தோம். ஆனால், நேற்றிரவு அவர் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்ட உடனேயே நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். மீனாவை பொறுத்தவரை மிகப்பெரிய இழப்பு. மீனாவின் தந்தை இறந்த பிறகு, அவரது இடத்தில் இருந்து குடும்பத்தையே வித்யாசாகர் வழி நடத்தினார். அவர் இப்போது இல்லை என்பதை அறியும்போது சோகமாக உள்ளது.
அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர் என்றும் தங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தில் மீனா பயணிக்க வேண்டும். நாங்கள் அவர்களது குடும்பத்திற்கு துணை நிற்போம்' என தெரிவித்துள்ளார்.