ஏழு இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட இல்லை... துடுப்பாட்டத்தில் தடுமாறும் இளம் நட்சத்திர வீரர்
புச்சி பாபு மற்றும் துலீப் டிராபி ஆகிய இரு தொடர்களிலும் நட்சத்திர இளம் வீரர் சர்ஃபராஸ் கான் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் ஆட்டமிழந்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடம்பிடிப்பதே சவால்
ஏழு இன்னிங்ஸ்களில் மொத்தமாக 145 ஓட்டங்களை மட்டுமே சேர்த்திருப்பதால், வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதே சவாலான விடயமாக மாறியுள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட மூத்த வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய சர்ஃப்ராஸ் கானுக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் வாய்ப்பளிக்குமா
ஆனால், துடுப்பாட்டத்தில் தொடர்ந்து தடுமாறி வரும் சர்ஃபராஸ் கான் கடந்த 7 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 145 ஓட்டங்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இதில் ஒரு அரைசதம் கூட அவர் பதிவு செய்யவில்லை.
மேலும், கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளதால், பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, துடுப்பாட்டத்தில் தடுமாறி வருவதால் தேர்வுக் குழு அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்குமா என்பது சந்தேகமே என கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |