சசிகலாவின் ஆதரவு எங்களுக்கு தான்! எதிரி திமுக-துரோகி அதிமுக: அடித்து சொல்லும் தினகரன்
தலைவரன தினகரன் சசிகலாவின் ஆதரவு எங்களுக்கு தான் என்று கூறியுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பின், அதிமுக-வின் நிலையே முற்றிலும் மாறிவிட்டது.
அதுவரை சசிகலா, தினகரன் என்று கூறி வந்த அதிமுகவின் முக்கிய புள்ளிகள், இவர்கள் இருவரையுமே ஒதுக்கி, கட்சியை வழி நடத்த ஆரம்பித்துவிட்டனர்.
இதனால் சசிகலா வெளியே வந்த பின்பு, இதற்கு பழிவாங்கு வகையில் ஏதேனும் செய்வார் என்று எதிர்பார்த்தால், சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
ஆனால், தினகரனோ நான் அப்படி கிடையாது, நிச்சயம் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று கூறினார். அதே போன்று தேமுதிகவுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது.
இதில் தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடாமல், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று விஜயகாந்தை சந்தித்த தினகரன், பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் ஆசி பெறுவதற்காக வந்தேன். தீயசக்தி திமுகவும், துரோக சக்தி அதிமுகவும் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது.
மக்களுக்கு நன்மை தரும் ஆட்சி அமைக்க எங்கள் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது
சசிகலாவின் மானசீக ஆதரவு, எங்களுக்கு தான்; வேறு யாருக்கும் அவரின் ஆதரவு இருக்காது. மக்களை ஏமாற்றும் வெற்று வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக அதிமுக, திமுகவினர் தந்துள்ளதாக கூறினார்.