கனேடிய மாகாணம் ஒன்றில் குறைந்தபட்ச ஊதியம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள புதிய புலம்பெயர்ந்தோர் முதலானோர்
கனேடிய மாகாணமான Saskatchewanஇல் குறைந்தபட்ச ஊதியம் மணிக்கு 11.81 டொலர்கள் மட்டுமே.
இந்த ஊதியப் பிரச்சினை காரணமாக, புதிதாக புலம்பெயர்ந்தோர், பெண்கள் உட்பட பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மாதந்தோறும் வாடகை கொடுப்பதற்கும், தங்களுக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் போதுமான உணவு வாங்குவதற்கும் பலர் கஷ்டப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார் தொண்டு நிறுவனம் ஒன்றின் எக்சிகியூட்டிவ் நிறுவனரான Len Usiskin. அதற்காக மோசமான நிலையிலுள்ள வீடுகளில் சிலர் குடியிருந்துவருவதாக தெரிவிக்கிறார் அவர்.
ஊதியம் போதுமானதாக இல்லாததால், பலர் இரண்டு இடங்களில் வேலை பார்க்க, அல்லது பகுதி நேர வேலை பார்க்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார் அவர். ஆனால், அதிலும் ஒரு பிரச்சினை உள்ளது. இவர்கள் நீண்ட நேரம் வேலைகளுக்குச் சென்றுவிடும்போது அவர்களது பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வது அடுத்த பிரச்சினையாகிறது.
கனடாவிலேயே குறைந்த அளவு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும் மாகாணங்களில் Saskatchewanம் ஒன்று.
ஒரு பக்கம் விலைவாசி ஏறிக்கொண்டே செல்கிறது, மறுபக்கம் குறைந்தபட்ச ஊதியம் மிகக்குறைவு. இதில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தினால் பொருட்களின் விலை உயரும் என்ற ஒரு தவறான கருத்தும் நிலவுகிறது.
Saskatchewan மாகாண குறைந்தபட்ச ஊதியத்தின்படி கணக்கிட்டால், ஒருவர் விடுப்பே எடுக்காமல் வாரம் ஒன்றிற்கு 40 மணி நேரம் வேலை செய்தால், சுமார் 24,500 டொலர்கள் சம்பாதிப்பார் (அதில் வரி வேறு செலுத்தவேண்டும்).
விடுப்பு எடுத்தாலோ, அதற்கான ஊதியம் பிடிக்கப்பட்டுவிட்டால் சுமார் 22,000 டொலர்கள்தான் கிடைக்கும் (அதிலும் வரி செலுத்தவேண்டும்).
பிரச்சினை என்னவென்றால், கனடாவில் 22,518 டொலர்களுக்குக் குறைவாக ஊதியம் பெறுவோர்தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதாக கருதப்படுவார்.
ஆக, இவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேலே இருப்பதாக அரசால் கருதப்படும் நிலையில், உண்மை நிலவரம் என்னவோ திண்டாட்டமாக இருக்கிறது என்கிறார் Len Usiskin.