இந்தியாவில் முதன்முறையாக கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம்
இந்தியாவில் முதன்முறையாக செயலற்ற கருணைக்கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் முதன்முறை
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா(Harish Rana) என்பவர், தனது 20 வயதில், அதாவது2013 ஆம் ஆண்டில் ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து கோமா நிலைக்கு சென்றார்.

தற்போது 32 வயதாகியுள்ள நிலையில், 13 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து 100 சதவீத PSV உள்ள அவரது மருத்துவநிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை.
அறுவை சிகிச்சை மூலம் நிறுவப்பட்ட PEG குழாய்கள் மூலம் வழங்கப்படும் மருத்துவ ரீதியாக நிர்வகிக்கப்படும் ஊட்டச்சத்து (CAN) மூலம் மட்டுமே அந்த நபர் உயிரைத் தக்கவைத்துக்கொள்கிறார்.
இந்நிலையில், அவரது தந்தை தனது மகனுக்கான உயிர்வாழும் சிகிச்சையை திரும்பப் பெற கோரி மனுதாக்கல் செய்தார். மேலும், தங்கள் மகன் செயற்கையாக உயிருடன் வைக்கப்பட்டு வருவதாகவும், தொடர் சிகிச்சை எந்த மருத்துவ நோக்கத்திற்கும் உதவவில்லை என வாதிட்டுள்ளார்.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த மருத்துவ வரலாறு அடங்கிய அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஆராய்ந்து, அது ஒரு "சோகமான" அறிக்கை என்று குறிப்பிட்டது.

இதனை தொடர்ந்து மருத்துவ சிகிச்சையை நிறுத்தி, செயலற்ற கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
செயலற்ற கருணைக்கொலை
செயலற்ற கருணைக்கொலை என்பது, உயிர்வாழும் மருத்துவ சிகிச்சைகளான வென்டிலேட்டர்கள், உணவுக் குழாய்கள் அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்றவற்றை நிறுத்தி வைப்பது அல்லது திரும்பப் பெறுவதைக் குறிக்கிறது. இதன் மூலம், நோய்வாய்ப்பட்ட நோயாளி இயற்கையாகவே இறக்க முடியும்.
2011 ஆம் ஆண்டில், அருணா ஷான்பாக் கருணைக்கொலை செய்யக்கோரிய வழக்கில், அவரை பராமரித்தவர்கள் அதனை எதிர்த்ததால் உச்சநீதிமன்ற அந்த மனுவை நிராகரித்தது. இருப்பினும், நீதித்துறை மேற்பார்வையின் கீழ் உயிர்காப்பு உபகரணங்களை திரும்பப் பெறலாம் என்ற கொள்கையை அது நிறுவியது.
2018 ஆம் ஆண்டில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, செயலற்ற கருணைக்கொலையை முறையாக சட்டப்பூர்வமாக்கியது. "கண்ணியத்துடன் இறக்கும் உரிமை" என்பது பிரிவு 21 (வாழ்க்கை உரிமை) இன் கீழ் ஒரு அடிப்படை உரிமை என்று அறிவித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |